Tuesday, October 26, 2010

புண்ணாகவராளி...

இமைகள் திறக்க மறுக்கும் காலையில், மெலிதான உறக்கத்தில் அசங்கும் குழந்தையின் கையாய் தொட்டது அந்த பாடல்.   சின்ன ஸ்வர வரிசையில் ஆரம்பித்த அந்த பாடலின் முனைகளில் கட்டியிருந்த மயிலிறகுகள் வீசிய கவரியில் குளிர்ந்த காற்று விலக்கியது நித்'திரையை'!.  மகுடி படத்தில் வரும் அந்த பாடலில் கேட்கும் குரல்களின் வசீகரம்,  சுகமான மலைச்சாரலில் நகரும் பேருந்தின் ஜன்னல் பயணமாய் மெட்டின் மிதமான வேகம், குளிர் நேர வெந்நீர் குளியலாய் இறங்கியது மனசை வழுக்கி கொண்டு.   வாழ்வதிற்க்கான அர்த்தங்கள் எத்தனையோ இருக்கிறது அதில் ஒரு மகோன்னதமான ஒரு விஷயம், இசையறிதல் அல்லது இளையாராஜா அறிதல்.   

திருவிழாக்காலங்களில், கல்யாணத்தில், சீமந்தம், காதுகுத்தில் என்று எல்லா விசேஷ காலங்களுக்கும், எழுபதின் இறுதியில் கேட்கும் ஒரு பாடல், கேட்டேளா அங்கே அத... என்று சிவக்குமாரின் வசனத்துடன் ஆரம்பாகும் பாடல் சுழலும் தட்டில் வெள்ளி விளிம்பென வந்து முகம் காட்டும் கண்ணன் ஒரு கைக்குழந்தை மாதிரி முத்துக்கள் எத்தனையோ... அத்தனையும் சொல்ல முடியாது ஆயுள் பரியந்தம், அதனால் இங்கு தொடப்போகும் பாடல்கள் இளையராஜாவின் தேர்வாகவும் இருந்த சில பாடல்களும் இருக்கும்.  ஒரு முறை குமுதமோ அல்லது குங்குமமோ... இளையராஜாவிற்கு பிடித்த பத்து பாடல்களை பட்டியலிட சொன்னார்கள், அதில் அவருக்கு பிடித்த பத்து பாடல்களை சொல்லியிருந்தார், எனக்கு அந்த பத்தும் ஞாபகம் இல்லை இப்போது, இதை அவரே இது இப்போதைக்கு ஞாபகம் இருப்பது என்றும்... நாளை கேட்டால் வேறு சொல்லலாம் என்றும் கூறினார் அது எனக்கும் பொருந்தும் இந்த தொடருக்கும் பொருந்தும். 

மறுபடியும், நாம் பாடலின் தொழில்நுட்பம் குறித்தோ, அல்லது இந்த பாடல் அமைந்த ராகம், சிக்கலான ஸ்வரக்கட்டுமானம் குறித்தோ பேசப்போவதில்லை, ஒரு சாமான்யனின் இசை ரசனை அல்லது இசையை அறிந்து கொள்ள முயல்பவனின்
முனைப்பு மட்டுமே இங்கு பிரதானம்.   பெயரறியா பறவைகளின் பாடல்கள் நனைக்கும் போது அதை பகுத்தறியாது அந்த நொடி நேர மயக்கம் பற்றி மட்டுமே இதில் இருக்கும்.   கபகரிசா... என்று ஆரம்பமாகும் அந்த பாடலின் வார்த்தை பிரயோகங்களோ அல்லது அதன் பொருட்செறிவோ அத்தனை சிறப்பில்லை என்றாலும்,  பாலசுப்ரமணியன் மற்றும் ஜானகியின் குரல்களில் இருக்கும் ஒரு சிறந்த இருகுரலிசை பாடல்களில் முக்கியமானது.  இதன் விசேஷமே... இளையராஜாவின் மெட்டும், அதில் இருக்கும் சின்ன சந்தங்களும், குழலிசையும், வீணை ஒழுகி நிரப்பும் இண்டர்லுட், பின்புல இசை, இரண்டு பாடகர்களின் குரலும் இந்த பாடலை ஒரு தரத்திற்கு மேலே நிறுத்தி விடுகிறது.  இந்த பாடலின் அழகே, சிறப்பே அதன் எளிமையும்,  பாடல் முழுக்க பயணிக்கும் கர்னாடக இசைபாணியும் தான்.  மலையமாருதம், ரீதி கௌளை என்று பலவாறு ராகம் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் பேசிக்கொள்ளட்டும்.  நமக்கென்ன  இந்த பாடல் கேட்டு ரசிக்கும் புத்தி போதும், ஒரு ஆழமான பசும் பள்ளத்தாக்கு, அல்லது ஹோன்னு கொட்டுற அருவி பார்க்கும் போது, ஆன்னு ஒரு உணர்வு வருமே அது போதும் நமக்கு.  அந்த நொடி வாழ்க்கை போதும் எதையும் கொண்டாட...

நீலக்குயிலே உன்னோடு தான் என்று தொடங்கும் அந்த பாடலை எங்கு கேட்டாலும் நின்று விட தோன்றுகிறது.  இதன் மேல் உள்ள ஈர்ப்பிற்கு முழு காரணமும் இளையராஜவாக தான் இருக்க முடியும்.  குரலிசை தேர்வும், மெட்டும், வாத்தியக்கலவையும் உன்னதமாய் இருப்பதற்கு நானன்றி யார் வருவார்னு வந்து நிற்பது ராஜா தான்.   ராசையா என்ற இளையராஜா இசை அமைக்க வேண்டும் என்றே ஒரே காரணத்திற்க்காக இது போன்ற இசை பற்றிய அறிவோ அல்லது அதை ஆராயும் மனமோ இல்லாமல் எடுத்த எத்தனை படங்கள் இளையராஜா தவிர ஒன்றுமே இல்லாமல் குப்பையாய் இருந்திருக்கிறது.... இதற்கு திரை உலகின் மிகப்பெரிய இயக்குனர்கள் எல்லாம் விதிவிலக்கில்லை...  அதிலும் கர்நாடக சங்கதிகளில், ஸ்வரங்களில் மெய்மறந்தவர்கள், மயக்கத்திலே எடுத்த படங்கள் எத்தனை, இசை பாடும் தென்றல், காதல் ஓவியம், கோயில் புறா, கவிக்குயில், மகுடி, இதயக்கோவில் இதில் ஒரு பாடலும் குறைவாய் இருந்ததில்லை.   இளையராஜாவின் எத்தனையோ பாடல்கள் இருக்கையில் இந்த பாடல் ஏன் என்ற கேள்வி வந்தால் அதற்க்கு என்னிடம் பதில் இல்லை, இதில் வரும் பாடல்கள் என் ரசனை தேர்வின்படி முதல், இரண்டாம் என்ற கட்டுக்குள் இல்லை, அதே போல் எந்த வித தரவரிசையையும் குறிக்கவில்லை.   சலசலவென்று ஓடும் சுனை பெருக்க நதியில் எந்த துளி தித்திக்கிறது என்று எனக்கெப்படி தெரியும். 

மிகச்சிறந்த பெண் குரலிசை பாடல்கள் இளையராஜாவின் இசையில் இருந்து வந்தவை தான் என்று சத்தியம் செய்யமுடியும் யாராலும்...  பழைய சுசீலாவின் பாடல்கள், ஜிக்கி, ஜமுனா ராணி, லீலா, ராஜேஸ்வரி என்று பெரிய பாடகர்கள் இருந்தும் மிகச்சிறந்த பாடல்கள் எழுபதுகளின் ஆரம்பத்திலும், எண்பதுகளின் முன் பாதியிலும் தான் இருந்தது என்று உறுதியாக சொல்ல முடியும்... ஜானகி, உமா ரமணன், சுசீலா, சசிரேகா, ஜென்சி என்று வித்தை காட்டிய மாயக்காரன் இளையராஜா.    தூரத்தில் நான் கண்ட உன் முகம், படத்தில் இடம்பெறாத இந்த பாடல் படமாக்க வேண்டிய சிக்கலினால் கூட கை விடப்பட்டிருக்கலாம்.   மகேந்திரன் போல இன்னுமொருவர் வேண்டும் பாடலை படமாகும் விதம் பற்றி பேச...  கன்னடத்தில் மிக பிரபலமான ஓர் டூயட்,  எந்த மொழியில் புகுந்தாலும் செறிவான இசையாகவே இருக்கும்... விழியிலே மன விழியின் மௌன மொழி பேசும்....

5 comments:

Unknown said...

இசையை பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம் ராகவன்.. உங்களின் மொழி என்னை உட்கார்ந்து கேட்டு கொண்டே இருக்க சொல்கிறது... இளை(சை)யராஜாவை பற்றி நான் என்ன சொல்ல.. அவரது ஒவ்வொரு பாட்டும் ஒரு அனுபவம் தான்....நன்றி ராகவன் பகிர்வுக்கு :)

காமராஜ் said...

முரட்டுக்காளை படத்தில் கோபிசெட்டிப்பாளையத்தின் பச்சை நிலங்களை.அதன் பசிய வாசத்தை அந்த ஓடைகளின் சலசலப்பை பாட்டோடு கேட்கவேண்டும். 'பல வண்ணங்கள் துள்ளிடும் சோலை'. ஜானகியம்மாவின் குரலில் காடு முழுக்க பாட்டு குதிச்சு குதிச்சு ஓடும் இல்லியா ராகவன்.

மாதவராஜ் said...

ஆமாம் ராகவன், பெண் குரலிசையின் அற்புதங்கள் கொட்டிக்கிடப்பது இளையராஜாவின் இசைவெளியில்தான். ‘அழகிய கண்ணே’ பாடலும், படமாக்கப்பட்டிருக்கிற விதமும், உங்கள் எழுத்துக்களின் ஊடே விரிந்தது.

அருமையாய் இருக்கிறது. தொடருங்கள்.

ஆறுமுகம் said...

\\தூரத்தில் நான் கண்ட உன் முகம், படத்தில் இடம்பெறாத இந்த பாடல் படமாக்க வேண்டிய சிக்கலினால் கூட கை விடப்பட்டிருக்கலாம்// நான் நிறைய தடவை நினைத்திருக்கிறேன்.

\\நீலக்குயிலே உன்னோடு தான் என்று தொடங்கும் அந்த பாடலை எங்கு கேட்டாலும் நின்று விட தோன்றுகிறது// உண்மை.

\\ இசை பாடும் தென்றல், காதல் ஓவியம், கோயில் புறா, கவிக்குயில், மகுடி, இதயக்கோவில்//
ஏன் வாணி ஜெயரமை விட்டீர்கள்?
ஆமாம் நீஙகள் என் மனசாட்சியா? வாழ மிகச்சிறந்த தருணங்களை உருவாக்கியவர்.

அன்புடன்
ஆறுமுகம்

rkm said...

தங்களது பதிப்பை படிக்கும்போது பழைய நினைவுகள் மீண்டும் மனதில் தோன்றுகிறது...நான் பள்ளியில் எட்டாம் வகுப்பில் படித்தபோது 1977 இல் ஒரு நாள் வகுப்பில் காலடி வைத்தார் இளையராஜா உடன் பாஸ்கர்...தான் படித்த கிளாஸ் ரூம் என்றார் இளையராஜா. உணர்வுகளின் உச்சத்தில் கண்ணீர் வடித்தார். எங்களது உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக உயர்த்த ருபாய் 25000 நன்கொடை கொடுத்தார். எழுபதுகளில் அது பெரிய தொகை அதைவிட அவர் மனது மிகப்பெரியது. அவர் இசை பற்றிபேச எனக்கு ஞானமில்லை. ஆனால் நெஞ்சை தொடும் ராகம், சுவாசத்தையும் சிலநொடி நிறுத்தும். இளையராஜாவின் இசையில் மட்டுமே பாடுபவரின் குரல் தெளிவாக கேட்க முடியும் என்பது என் எண்ணம். இசைகருவிகொண்டு பாடுபவரின் குரலை நெரிக்காமல் இசைக்கும் குரலுக்கும் சமமாய் முக்கியத்துவம் தருவது இளையராஜாவின் சிறப்பு.