Thursday, November 04, 2010

சிவரஞ்சனி என்பது ராகம் மட்டுமல்ல...

அவளின் பெரிய விழிகளும், சற்றே மேடேறிய நெற்றியும், அந்த நெற்றியில் வைப்பர் போல இரண்டு பக்கமும் துடைக்க யத்தனிக்கும் முடியும், அவள் அணிந்திருந்த கருப்பு ரவிக்கை, தாவனியும், முன் நெற்றியில் புருவத்தின் மத்தியை மெலிதாய் தாண்டிய ஸ்டிக்கர் பொட்டும், கழுத்தை ஒட்டி அணிந்திருந்த கருப்பும், சிவப்பும் கலந்த மணிகள் கோர்த்த பாசியின் மத்தியில் தொங்கும் மனசு. தடதடவென்று எல்லாம் மாறி மனசுக்குள் சிம்மாசனம் போட்டு என்னை ஒரு ராஜகுமாரனாய் இருத்தும் வெளி.  

ஏழு மணிக்கு மேல் நான் ஏறிக் கடக்க நினைந்து கிடக்கும் மொட்டை மாடி படிகள் அவளின் வீட்டின் பின் கதவை திறந்து வந்தால் நுழையும் வெளிச்சத்தில் முட்டும். மொட்டை மாடி படிக்கூடுக்கும், அவளின் வீட்டு பின் கதவு சுவரின் இடையே தெரியும் கீத்து நிலா, தண்ணீர் பிடித்து வைத்திருந்த தொட்டி, பக்கெட் என்று எல்லா நிர் நிலையிலும் நிலவையும் அவளையும் பிரதிபலிக்கும். பின் வாசலில் நின்று கொண்டு என்ன என்பது போல பார்ப்பவளின் பார்வையில் கொதிக்கும் நிலா, பக்கெட்டில் வைத்திருந்த தண்ணீர் எல்லாம் சேர்ந்து, காய்ச்சல் கண்டவன் போல, சோர்வாய் இருக்கும். சிரித்து விட்டு உள்ளே செல்வாள், கதவை திறந்து வைத்திருந்தால், யாருமில்லை உள்ளே வா என்ற அர்த்ததின் படி நானும் நிலவும் நுழைகையில், மெத்தென உள்ளங்கை பிடித்து இழுப்பவளின் ஆசையில், காமத்தில், காதலில் அல்லது நேசத்தில் பிறக்கும் இதுவரை உணராத்தொரு சங்கீதம் மாதிரி இருக்கும் இளையராஜாவின் அந்தப் பாடல். அந்த பதின் பருவத்தில் அவளின் சினேகமும், இளையராஜாவின் பாடல்களும் ஒரே கிறக்கம் எனக்கு.

மிக நெருக்கமாய் அந்த பாடல், காதுக்குள் வந்து புசுபுசுவென்று வெம்மையாய் மூச்சு விடும் ஒரு பிரிய சங்கீதம்... பிடரி மயிர் விலக்கி, முளைத்தும் முளைக்காமலும் இருந்த மயிர் அரும்புகளில் படிந்து விட்டிருந்த அன்றைக்கான மஞ்சளும், கிறக்கமான பவுடரும், வியர்வையும் கலந்த ஒரு வாசனையை உணரும் எல்லாமும் தாங்கி நிற்கும் நெருக்கம் அந்த பாடலை கேட்கும்போது ஏற்படுகிறது. இசையும் பாடலும் ஒரு இடைவெளி இல்லாது பின்னுதல் போலே ஒன்றோடொன்று பினைந்திருந்தது. முதலாய் இந்த பாடல் எங்கு கேட்டேனென்று இப்போதும் ஞாபகம் இல்லை, யார் அறிமுகத்தில் வந்திருக்கும் என்று யோசித்தால் அனேகமாய் ராஜேஷாய் இருக்கலாம் என்று வந்து நின்றது. படமாக்கப்பட்ட விதமும், நடிகர்களின் இயல்பான, கவித்துவமான நடிப்பும், பாடல்களின் வரிகளும் நம்மை விடாது துரத்தி ஊழ்வினையாய் வதைக்கிறது.

மிகப்பெரிதாய் பேசப்பட்ட கமல்ஹாசனின் படத்தில் அமைந்த பாடல் இது. படம் கமலஹாசனின் முதல் தயாரிப்பு... இசை இழை இழையாய் சேர்த்து நெய்து பிலிமில் கலந்த ஒலி பிரிக்கமுடியாததாய் இருக்கிறது, படம் முழுக்க ராஜாவின் ராஜபாட்டையில் ஒவ்வொரு காட்சியும் படமாக்கப்பட்ட விதம் தமிழ் சினிமாவின் புதிய அத்யாயங்களை அவசரமாக எழுதத் தோன்றியது. வைரமுத்துவின் பொன் மாலை பொழுது என்ற நிழல்கள் படத்தில் வரும் பாடலை கேட்டு வானம் எனக்கொரு போதிமரம் என்ற வரியில் லயித்த கமல் விரும்பி கேட்ட கவிஞன் புழுதியில் அனல் பறக்கும் தெருக்களில் இருந்து வந்த வைரமுத்துவின் முதல் வரியே கமல் என்னும் கலைஞனை, கவிஞனை கட்டிப்போடுகிறது. அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என்ற பாடல் சிலிர்க்க வைக்கிறது எல்லோரையும்... இளையராஜா, கமல், பாரதி என்று எல்லோரும் பாராட்ட புதிதாய் மீசை வளர்க்க ஆரம்பித்த கவிஞனுக்கு பெருமிதம்.

என்னை கிறங்க வைத்த பாடல் அந்தி மழை இல்லை, இன்னும் ஒரு விசேஷமான பாடல்... கொலைகார கண்களின் மாதவி, கமலுக்கு பார்வையில்லாததால், தன் பங்குக்கும் கண்கள் வேண்டும் என்று நீள்விழி அழகி மாதவியை தெரிவு செய்தார்கள் என்று நினைக்கிறேன். மாதவி இதைவிட அழகாய் வேறு எந்த படத்திலும் காண்பிக்கப்படவில்லை என்றால் நீங்கள் நம்ப வேண்டும். ஏக் துஜே கேலியே விலும் கூட இத்தனை அழகில்லை அவள். ஓவியம் பழகும் பார்வைத் திறன் இல்லாத கமலிடம் தன்னை தொட்டுணர்ந்து வரைய பழக்கும் பாடல்... அழகில் அழகு தேவதை... என்று தேவகந்தர்வனின் குரலில் மயக்கும் பாடல் கேட்கும் சுகம் அலாதியானது.

குருடர்கள் யானையை பார்த்து சொன்ன கதை எத்தனை மூடத்தனமானது, எவ்வளவு சுவாரசியங்கள் உணரும் விரல்கள், நகக்கண்கள் கூட விழித்துக் கொள்ளும் அதிசயம் நிகழும். தலையில் இருந்து தொடத்தொடங்கியவன் முதலில் தொடுவது கூந்தல், இங்க சறுக்க ஆரம்பித்த வைரமுத்து என்ற கவிஞன் கடைசி வரை சறுக்குகிறான், பாடல் வரிகளில் குறையே இல்லை என்றாலும், பாடல் கண் தெரியாத ஒருவன் தொட்டுணரும் போது வண்ணம் எப்படி தெரியும்...மின்னுவது எப்படி தெரியும்... ஆனால் கொஞ்சம் கொஞ்சம் மாற்றினால் மிகச்சிறந்த கவிதையாகும் இந்த திரைப்பாடல். இதில் மிகக்குறிப்பான விஷயம் பிண்ணனியில் வரும், புல்லாங்குழலும், வயலினும் உபயோகிப்படும் இடங்கள், நம்மை கிறங்க செய்துவிடுவது உறுதி. படமாக்கப்பட்ட விதத்தில் கமல் எங்கோ போய் விடுவார்... இந்த படம் சிங்கிதம் சீனிவாசராவினால் இயக்கபட்டது... படத்தின் அவுட்லைனை சொல்லி, திரைக்கதை எழுதி அல்லது எழுத துனையிருந்து முடித்த படத்தின் பெருமையை நாம் எப்படி சிங்கிதம் அவர்களுக்கு தாரைவார்க்க முடியும்... கமலின் பங்கு அதில் நிறைந்தே இருக்கும்...

சிவரஞ்சனியின் சாயலில் இருக்கும் இந்த பாடல், இளையராஜாவின் முற்போக்கினாலோ அல்லது யேசுதாஸின் புரிதலாலோ... கொஞ்சம் வேறு ராகத்தின் சாயலும் இருக்கும் இந்த பாடல்... யேசுதாஸின் குரலில் நம்மை பித்து பிடிக்க வைத்துவிடும், எத்தனை முறை ஒரே நாளில் கேட்க வைத்திருக்கிறது. இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லையே-வில் வரும் அந்த குழைவு, காத்திரம் இளையராஜா, யேசுதாஸினால் மட்டுமே முடிந்த ஒன்று. ஒரு முறை நான் நாக்பூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, போர்க் லிப்ட் ஓட்டும் முருகன், இரவில் ஒரு நாள் நல்ல சுதியில் பாடிய இந்த பாடல் என்னை என்னவோ செய்தது. இத்தனைக்கும் அவன் சரியான சுதியில் பாடவில்லை, தாளக்கட்டும் சரியில்லை, ஆனால் அவன் கனத்த குரலில் உடைந்து உடைந்து வந்த சிவரஞ்சனி ராகம் அல்லது இந்த பாடல் ரம்மியமாய் இருந்தது. ஒரு அங்கம் கைகள் அறியாதது என்று பக்கத்துல இருந்து பலசரக்கு கடைக்காரனின் மனைவியைப் பார்த்து சிரித்தவனின் சேட்டையையும் மீறி இனிமையாய் இருந்தது. சிவரஞ்சனியில் அமைந்த எல்லாப்பாடல்களும் சுகமானவையா என்றால் எனக்குத் தெரியாது, ஆனால் இந்த பாடல் எந்தவித ஒப்பீடும் இல்லாத ஒரு பாடல் என்றால் அது சும்மா இல்லை.

12 comments:

THOPPITHOPPI said...

தீபாவளி வாழ்த்துக்கள்

Unknown said...

ராகவன் வழக்கம் போல சொக்க வச்சிட்டீங்க..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நல்லா இருந்தது, அந்த சிவரஞ்சனி!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/

ரிஷபன் said...

இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துகள்.

Anonymous said...

http://www.youtube.com/watch?v=OhnIGSkRxrI

அம்பிகா said...

ராகவன்,
ராஜபார்வை என்றாலே அந்திமழை பாட்டு தான் பலருக்கும் நினைவு வரும். ஆனால் மற்றொரு அருமையான பாடலை அழகாக பகிர்ந்து இருக்கிறீர்கள்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

காமராஜ் said...

ராகவன்....

ரொம்ப சந்தோஷமாக இருக்கு ரகவன்.
ரொம்ப பொறாமையும் கூட. முந்திக்கொண்டீர்கள்.

ராஜபார்வை படம் தாமதமாகத்தான் பார்த்தேன். பார்க்கிறவரை நானும் கூட கூட்டத்தோடு சேர்ந்து 'அந்தி மழை' பாட்டுத்தான் உச்சம் என நினைத்திருந்தேன்.

யாரும் இந்த 'அழகில் அழகு' பாட்டைப்
பிரஸ்தாபிப்பதில்லை.கேட்டபோது இது எந்தப்படத்தில் என்று நண்பரிடம் கேட்டேன்.அன்றிலிருந்து இன்று வரை இந்தப்பாடல் TOP 1000 பாடல்களில் முதல் பாடல்.

வாசனைகளுக்கு அடுத்து,காலங்களை நிகழ்வுகளை
சட்டென பரனிலிருந்து தூக்கித்தருவது இந்த சினிமாப்பாடல்கள் தானே ராகவன்.

நான் முன்னமே சொன்னது போல நடுஜாமத்தில் எழுந்து ரிக்கார்டு ப்ளேயரில் 'சிறுபொன்மணி அசையும்'பாடலைப்போட்டுக் கிறங்குவதும்.அதை அவள் கேட்டிருப்பாளா என்று மருகுவதும்.எந்த நிலையிலும் இப்போதுகூட அலையலையாய் அடிக்கும்.ஆரம்ப இசையில் வயலின்களின் மொத்த
அசைவு ஒரு இனிய பூகம்பமாய் உடலை ஆட்டுவிக்கும்.

இன்னொரு கிறுக்கு. பாபி படத்தில் வரும் 'ந சாயே தோ நகி'( சரியா ?) பாட்டையும் நடு ஜாமத்தில் போட்டு சிவனேன்னு தூங்குகிற சனங்களை இம்சைப்படுத்தியவன் நான்.நல்ல வேளை என்னை யாரும் அடிக்கவில்லை என்பதே பெரிய பெருமிதம்.

அதுபோலத்தான் இந்த 'அழகில்' பாட்டு.சொல்லமுடிந்தவையும் சொல்லத் திராணியற்றதுமான நினைவுகளின் பூதங்காத்த பொக்கிஷம் தான் 'அழகில் அழகு'.

நீங்க சொல்லிட்டீங்க.ஒரு இரவு முழுக்க உஇட்கார்ந்து தரவிறக்கம் செய்து கனினியில் சேமித்து வைத்திருக்கிறேன்.( ஆடியோ மட்டும்) மாதவியின் கண்கள் கமலோடு கூட இருக்கையில் கூடுதல்வேகத்தில் உள் இழுக்கும்.

அழகு ராகவன்...

காமராஜ் said...
This comment has been removed by the author.
காமராஜ் said...
This comment has been removed by the author.
இரசிகை said...

yenakkum mikavum pidiththa paadal...
paakkavum avvalavu superb-aa irukkum.
antha idame kavithaiththuvamaa irukkum.
oru photo irukkum...kangal mattum irukkum.athai ore oruvaattithaan kaamippaanga...:(
kamal avvalavu iyalpaa act seithiruppaar.

ithai yezhuthinathu kavipperarasu.kannathaasan

nalla pakirvu...
vaazhthukal ragavan sir:)

பத்மா said...

"நானும் நிலவும் நுழைகையில்",

ஆஹா ராகவன் சாட்சி வைத்துகொண்டா ?
அது தான்நிலவு காயும் நேரமெல்லாம் .."இந்த மண்ணில் உன் போல் பெண்ணிலேயே"என்று தோன்றுகிறதோ ?
காமராஜ் சாரும் நீங்களும் கலந்து கட்டி உருகி இருக்கீங்க ..உருகிய மற்றொர்று ஜீவனும் உண்டு ..
மாதவி டிக்டிக் டிக் ல பூ மலர்ந்திட வில் கூட கண் செம அழகு ..
காமராஜ் சார் பாபி ரசிகரா நீங்க ? மெய்ன் ஷாயத் தொ நஹின் ..ன்னு நினைக்கிறன்
அதன் சுட்டி இங்க enjoy ..
http://www.youtube.com/watch?v=S0WUTbrUqAk

மற்றபடி உங்கள் எழுத்துக்கும் ரசனைக்கும் சொல்லவும் வேண்டுமோ?

சித்திரவீதிக்காரன் said...

கமல்ஹாசன் மற்றும் இளையராஜாவின் இரகசிகரான நானும் உங்கள் பதிவைப் பார்த்து மீண்டும் ஒருமுறை இராஜபார்வை பார்க்கவும் கேட்கவும் விரும்புகிறேன். நீங்கள் நம்ம மதுரைக்காரர் எனும் பொழுது மகிழ்வாய் இருக்கிறது. பகிர்விற்கு நன்றி