Thursday, December 31, 2009

நல்வாக்கு...

அன்பு நிறை எல்லோருக்கும்...

இந்த வருஷம் இன்னும் முடிய சில பொன் தருணங்கள் மிச்சமிருக்கிறது... நிறைய கொடுத்து விட்டு செல்கிறது... உன்னத உறவுகள், பகிர்வுகள் என்று இந்த  வருஷம்  முழுக்க முழுக்க நல்லதனங்களில் நிறைந்திருந்தது... இருக்கிறது.

எனக்கு பெங்களூரில் வேலை கிடைத்ததும் ஒரு மிக பெரிய சந்தோசம்... வீடை கட்டி இரண்டு வருடங்களாக பூட்டி வைத்து வாழ கொடுத்து வைக்க முடியாமல் மனசுக்குள் புழுங்கி போன நாட்களை இன்று நினைக்க... கண் நிறைகிறது... வீடென்று எதனை சொல்வீர்னு மாலன் சொல்றது மாதிரி என் பெங்களூர் வீடு எங்கள் முதல் கனவு வீடாய், ஆசையையும் இழக்க விரும்பா தருணங்களையும் போட்டு கட்டியது... என் மனைவியின் அழகுணர்ச்சியை, உபயோக மதிப்பை சேர்த்து பிசைந்து வனைந்த சிற்பமாய் நிற்கிறது இப்போது... இன்னும் பர்னிஷிங் பண்ணவில்லை... ஆனாலும் வாழ்க்கை அதன் உயர் தரங்களுடன் எங்களிடையே பரிமளிக்கிறது நாங்கள் முதன் முதலாய் சந்தித்த நிமிடத்தின் மொத்த தொகுப்பாய்...

புரைக்கேற்றிய மனிதர்கள் என்று பாரா போல எனக்கு எழுத வரவில்லை... ஆனால் இந்த வருஷம் அதன் கடைசி துளிவரை எனக்கு மிக நல்ல நண்பர்களை சேகரித்து கொடுத்து உள்ளது... காமராஜ் வழியாக உள் புகுந்து மாதுவை தொட்டு, பாரா, நவாஸ், நேசமித்திரன், இன்று அம்பிகா என்று வளர்ந்து கொண்டிருக்கிறது இடைவெளிகளை, தூரங்களை இட்டு நிரப்பிக் கொண்டே ஒரு உறவுப்பாலம்.   என்னை மேலும் பாதித்து இன்னும் தொடர்பே இல்லாமல் இருக்கும் சில பெயர்களில்... இராகவன், அமிர்தவர்ஷிணி, கும்க்கி என்ற பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.  வரபோகிற வருஷம் இதை எனக்கு நிச்சயமாக்கி தரும் என்று நிறைய நம்புகிறேன்...

காமராஜின் சாமக்கோடங்கியின் நடை என்னை பாதித்த அளவு யாரும் இன்று வரை என்னை பாதிக்க வில்லை... என்னை எழுத தூண்டியர்களில் மிக முக்கியமானவர்கள் பட்டியலில் காமராஜ், மாது மற்றும் பாரா என்கின்ற இந்த முப்பரிமாணம் முதன்மையாய் இருக்கும், இருக்கிறது.  எல்லோருக்கும் மிக பெரிய அன்பும் நன்றியும்.  

நிறைய நல்ல விஷயங்கள், எதிர்பார்ப்புகள், வேண்டுதல்கள், கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் சிறு சிறு முயற்சிகளில்

பிரியத்தின் வழி எல்லோருக்கும் என் புது வருஷ வாழ்த்துக்கள்...

அன்பும், ஆயிரம் நன்றிகளுடனும்,
ராகவன்

6 comments:

S.A. நவாஸுதீன் said...

எனக்கும் 2009 வாழ்க்கையில் நிறைய தந்திருக்கிறது.

பா.ரா., நேசன், பாலா, ராகவன், என ஏராளமான நட்புக்கள் என்னை பாக்கியவாளியாக்கியவர்கள்.

///எங்கள் முதல் கனவு வீடாய், ஆசையையும் இழக்க விரும்பா தருணங்களையும் போட்டு கட்டியது... என் மனைவியின் அழகுணர்ச்சியை, உபயோக மதிப்பை சேர்த்து பிசைந்து வனைந்த சிற்பமாய் நிற்கிறது இப்போது... இன்னும் பர்னிஷிங் பண்ணவில்லை... ///

நானும் இதை அப்படியே எனதாக்கிக் கொள்கிறேன் ராகவன். அடுத்த மாதம் எப்படியும் புது வீடு புக வேண்டுமென எஞ்சினியரை விரட்டிக்கொண்டு இருக்கிறேன்.

S.A. நவாஸுதீன் said...

வரும் நாட்களில் எங்கும் மனிதநேயம் முக்கியத்துவம் பெறட்டும். நல்ல உடல்நிலையோடு எல்லா வளமும் பெற்று சந்தோஷம் மட்டுமே நிலைத்திருக்கும் வாழ்வாக எல்லோருக்கும் அமையட்டும்.

அம்பிகா said...

தேடி, தேடி மற்றவர்களுக்கு வரையும்
ஒவ்வொரு பின்னூட்டத்திலும் வெளிப்படுவது உங்கள் அன்பு மட்டுமே!!!

உங்கள் கனவு இல்லம் உஙகள் எல்லாக் கனவுகளையும் நனவாக்கும்
இல்லமாக அமைந்திட வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

மாதவராஜ் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என் அன்பு ராகவன். திகட்டாத பிரியம் உங்களுடையது. உங்களுக்குள் இயல்பாய் இருக்கிற இலக்கிய உலகை நாங்கள் ரசிக்கிறோம். 2010ல் கனவுகள் மெய்ப்படவும், எழுத்துக்கள் மேலும் வசப்படவும் வாழ்த்துகிறேன்.

காமராஜ் said...

ராகவன், அன்புக்கினிய ராகவன்.
இந்த நல்ல நாளில் வலையில் கிடைத்த சொந்தங்களோடு அன்பைப்பகிர்ந்துகொள்வதில் பெரிதும் பரவசமாகிறேன். சிக்கனமில்லாத அன்பிருக்கிற எல்லோரிடத்திலும் எல்லாம் கைகூடும். எழுத்து உங்களையும், நீங்கள் எழுத்தையும் தேர்ந்துகொண்டதில் உள்ளபடி எங்களுக்குத்தான் உபயோகம்.மற்றொரு புதிய சொல்,சிந்தனை,கதகதப்பான அன்பை நிச்சயம் வலை அறியும்.
வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

ஒரே குடும்பம் போல் இருக்கு ராகவன்,நீங்கள் பேசியதும் பின்னூட்டம் பேசியதும்.

நாந்தான் தாமதபட்டுவிட்டேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் என் ராகவன்,நவாஸ்,,மாது,காமராஜ்,அம்பிகா!