Saturday, January 09, 2010

பூங்காப்பொழுது...

அந்த பெண் பிள்ளை
அவள் உடன் இருந்த சிறுவனுக்கு
அக்கா போல் இருந்தாள்
இரட்டை சடையில்
ஒரு பக்கம் மட்டும்
ரிப்பன் பூசனிப்பூ மாதிரி
தொங்கிக்கொண்டிருந்தது

அந்தச் செடியில்
பூத்திருந்த
ஏதோ ஒரு பூவை காட்டி
பேசிக்கொண்டிருந்தாள்
அவன் பூவையும்
அவள் கண்களையும்
மாற்றி மாற்றி பார்த்துக்
கொண்டிருந்தான்

அந்த சிறுவன்
அந்தப்பூவை தடக்கென்று
பறித்து விட்டான்
பதறிப்போய்
அவனை ஏதோ
திட்டினாள்
கையில் இருந்த
பூவை திரும்பி செடியில்
செருக முயன்றாள்
அது நிற்காமல் கீழே விழுந்து
கொண்டே இருந்தது

கொஞ்சம் பார்த்துக்
கொண்டே இருந்தவள்
செடியில் உள்ள காம்பை
சிறிது கிள்ளி பூவின்
தண்டை அதற்குள்
செருகி விட்டாள் -
அது நின்று சிரித்தது...

இரண்டு பேரும் இப்போது
அதை பார்த்து சிரித்தனர்
அவர்களின் சிரிப்பு
அந்த மலர்சிரிப்பை விட
அழகாய் இருந்தது...

மறுநாள் வந்து
பார்க்க வேண்டும்
என்று பூங்காவில் இருந்து
அறைக்கு கிளம்பினேன்...

காலின் கீழே 
இடறிய
ஒரு பூவை கையில் எடுத்து
இழந்த செடியைத் தேடுகிறேன்
கிடைக்கவில்லை
இந்த கவிதை கிடைத்தது
செருகி அழகு பார்க்க...

8 comments:

அண்ணாமலையான் said...

நல்லா காமெடியா எழுதறீங்க...

பா.ராஜாராம் said...

வாவ்! கிரேட்,ரொம்ப பிடிச்சிருக்கு ராகவன்.

அண்ணாமலை,இது கவிதை சார்!

கவிதைனா தெரியுமா சார்?

க-வி-தை.என எழுத்து கூட்டல் இல்லை.வேறு பதிவிற்கான(template) பின்னூட்டத்தை இங்கு தவறி விட்டீர்கள் போல.நிதானம் வாத்யாரே..

na.jothi said...

எல்லோருக்கும் எல்லாம் வாய்ப்பதில்லை
அந்த சிறுவர்களுக்கு செடி எங்களுக்கு
உங்களிடமிருந்து இந்த கவிதை

நல்லா இருக்குங்க

S.A. நவாஸுதீன் said...

மென்மையான உணர்வை அழகாக வெளிப்படுத்தும் கவிதை ராகவன்.

அம்பிகா said...

\\அந்த மலர்சிரிப்பை விட
அழகாய் இருந்தது...\\

கவிதையும் அழகாய் இருக்கிறது.

காமராஜ் said...

//அந்தச் செடியில்
பூத்திருந்த
ஏதோ ஒரு பூவை காட்டி
பேசிக்கொண்டிருந்தாள்
அவன் பூவையும்
அவள் கண்களையும்
மாற்றி மாற்றி பார்த்துக்
கொண்டிருந்தான்//

ராகவன்..
அண்ணாமலையானை மறந்துவிடுங்கள்,
அன்பின் மிகுதியால்
கேலிபேசுகிறார் என்று எடுத்துக்கொள்வோம்.
ஒரு கவிஞனை
எந்த நிகழ்வும்
இப்படித்தான் பாதிக்கும். எல்லோருக்கும் கல்.
சிற்பிக்குமட்டும் அது சிலை.
அந்த 247 எழுத்தும் அன்றாட வாழ்க்கையும் அப்படியேதான் இருக்கிறது
கவிஞர்களுக்கு மட்டும்
அது கவிதையாகிறது.
எனக்கு அப்துல்கலாமிடம்
ஒரே ஒரே ஒரு விஷயம்
மட்டும் தான் பிடிக்கும்.
அது கனவு காணச்சொன்னது . கவிதை,கதை,
கண்டுபிடிப்பு,கலகம்,
புரட்சி எல்லாமே கனவின் பின்விளைவுகள் ராகவன்.
இன்னும் நிறைய்ய நிறய்ய
கனவு காணுங்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

அருமை சார்..!

அழகான உணர்வுகவிதை...!

மாதவராஜ் said...

ஆஹா..! ரசித்தேன். சுற்றிலும் கவிதைகள் கொட்டிக் கிடக்கின்றன! அதைக் கவியுள்ளங்கள் கண்டு ரசிக்கின்றன. இந்த ரீதியிலேயே உங்களது சில கவிதைகளும் இருப்பதைப் பார்க்கிறேன்.

எல்லாவற்றையும் எழுது என் கவிஞனே!