Tuesday, January 26, 2010

பொம்மைக்காரர்கள்

எனக்கான பொம்மைகளை
மிகவும் தேர்ந்து கொள்கிறேன்

கொஞ்சம் தள்ளி நின்று
பார்க்கிற வரிசையில்
எல்லாமே ஏதோ சாகசக்காரர்களின்
 அல்லது ஒரு
வித்தைக்காரர்களின் மறு ஈடாய்
இருக்கிறது

ஒன்று
உடலை வில்லை போல வளைத்து
அந்தரத்தில் தொங்குகின்ற ஒன்று
வனப்புடன் வளையமாய்
தன்னை குறுக்கிய ஒன்று
ஆனால்
எல்லா பொம்மைகளின்
கண்களிலும் கைதட்டல்களுக்கான
காதுகள் முளைத்து காத்துக் கிடக்கின்றன

இயல்பாய் பாக்கு இடிக்கும்
பாட்டி, பள்ளி செல்லும் 
சிறுமியுமான பொம்மைகள்
என்னை நடந்து கடக்க
எட்டிப்பிடிக்க விரையும்
கால்கள் எட்டுக்கு எட்டு
தேய்ந்து குறுகுகிறது

வசப்படாமலே கவிதை...
வாழ்க்கை மாதிரி

6 comments:

காமராஜ் said...

ராகவன். இந்தக்கவிதை பல இடுக்குகளில் நுழைந்து கதை சொல்லுகிறது.நுழையமுடியாத இடங்களில் இருந்து திரும்பி இயல்பு வரும்போது எல்லோர் கையும் ஒருசேரக்குவிகிறது. எனது மனமார்ந்த கைதட்டல்.

மாதவராஜ் said...

ம்...ம்.... ராகவன் புரிகிறது..... புரிகிறது....

பொம்மைகளை வலைப்பதிவுகளாக வைத்துப் பார்த்தால் சட்டென புரிகிறது.

தங்களது கவிதைக்கான தேடலில் இன்னுமோர் அருமையான கவிதை!

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு ராகவன்

உயிரோடை said...

க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌

நேசமித்ரன் said...

:)

வாழை மரத்தில் ஏற முயலும் சாரைகுட்டியை போலத்தான் கவிதைகள்

தோல் உரித்து தோல் உரித்து மினுப்பேற்றிக் கொள்கின்றன சொற்களும் அரவங்களும்

பா.ராஜாராம் said...

கவிதை அப்படியே ராகவன்.எப்படி நீங்களோ..

இப்பல்லாம் ராகவன் சித்தப்பா அடிக்கடி கூப்பிடுறாங்கப்பா.என்று கூறுகிற நம் மகளின் குரலில் குயில் இருக்கு ராகவன்.

என்ன செய்ய போறேன் உங்களுக்கு?..