Thursday, January 14, 2010

கையடக்க கடல்

ஒவ்வொருமுறை கடற்கரையில்
இருந்து திரும்பும் போது ஏமாற்றம் அடைகிறேன்
இரண்டு காரணங்களுக்காக

ஒன்று
கடலை எப்போதும் என்னுடன் எடுத்து
வர முடிவதில்லை

இரண்டு
என் உடைகளில் ஒட்டி வரும்
மணலையும் உதிர்த்து விட்டு போக
வேண்டியதாய் இருக்கிறது

ஆனாலும்
என் கால்சராய் பட்டியில்
எப்படியோ
உருண்டு கொண்டு வந்து விடும்
சிறிது மணலில் விரிகிறது
ஒரு அளப்பறியா கடல்

14 comments:

பாலா said...

கவிதை அருமை
ஆனால் பாராவின் பாதிப்பு அதிகம்
தவறாக சொல்லி இருப்பின் எனை மன்னிக்க

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு வாழ்த்துக்கள்....

மாதவராஜ் said...

என்ன சொல்வது போங்கள்.....

//கடலை எப்போதும் என்னுடன் எடுத்து
வர முடிவதில்லை //
இதில் எவ்வளவு சொல்லிவிட முடிகிறது உங்களால். எத்தனை பெரிய கனவுகளும், ஆசைகளும் நமக்குள்!

சங்க காலத்துப் பாடல் ஒன்றில் வரும்... அதுவும் ஒரு பெண் சொல்வது போல!

என் காதலை எப்படி புரியவைப்பது என்னும் வேட்கையில், “இந்தக் கடலை என் புறங்காலால் அடித்து வற்றச் செய்து விடுவேன்” என்பதாய் அந்த வரிகள் இருக்கும். அப்படியொரு அனுபவமாய் இருக்கிறது இப்போதும்.

கால்சராயில் இருந்து விழும் மணலில் கடலும் ஓடுகிறது என் நண்பனே, உருகிச் செல்லும் உங்கள் அன்பாய். நிறைந்து போகிறேன்.

நேசமித்ரன் said...

எழுதித்தீராத சொற்கள் பேசும் கடலைப் பாடச் சலியாததாய் இருக்கிறது

எனக்கு சங்கில் அள்ளி வர முடிந்தது அதன் ஓங்காரதை மட்டுமே

ராமேஸ்வரத்தின் மணலும் கன்னியாகுமரியின் மணலும் நிறத்துக்கு

கடல் என்ற சொல்லுக்குள் கடல் மட்டுமா இருக்கிறது பாலா?
ஒப்பீடுகள் வருத்தமளிக்கிறது

வடிவங்களில் லயிக்கும் மனம் உள்ளீடுகளை பார்க்கத் தவறிவிகிறது

வாழ்த்துகள் ராகவன்

ப்ரியமுடன் வசந்த் said...

என் கால்சராய் பட்டியில்
எப்படியோ
உருண்டு கொண்டு வந்து விடும்
சிறிது மணலில் விரிகிறது
ஒரு அளப்பறியா கடல்//

யாரையும்போலில்லாமல் தனித்துவமா இருக்கிறது கவிதை ....!

காமராஜ் said...

விரிந்துகிடப்பது,அலைவது,அலைய வைப்பது.எல்லைகளற்றுத்தொடர்வதென சொல்லித்தீராத வற்றை தன்னுள் புதைத்துவைத்திருக்கும் கடல்.தன்னிடம் வரும் யாரையும் உள்ளிழுத்துக்கொள்ளும் வல்லமை மிக்கது. நினைவுகளால்.இந்தக்கவிதை மாதிரி.

நேசமித்ரன் said...

அன்பின் ராகவன்

உங்களின் பின்னூட்டம் பார்த்தேன்
எனக்கான உங்களின் முந்தைய பின்னூட்டம்

http://nesamithran.blogspot.com/2010/01/1-2.html

இதற்கு பிறகு பின்னூட்டம் வரவில்லையே என் இனிய நண்பரே

அன்பு நிறைய மக்கா

திருநாள் வாழ்த்துகள்

தமிழ் said...

அருமை

அமிர்தவர்ஷினி அம்மா said...

//கடலை எப்போதும் என்னுடன் எடுத்து
வர முடிவதில்லை //

ரசித்த வரிகள்

அதே போல் அளப்பறியா கடலும்

அம்பிகா said...

//கடலை எப்போதும் என்னுடன் எடுத்து
வர முடிவதில்லை //

அழகான கற்பனை!!

//"கையடக்க கடல்"//
கவிதை ரொம்ப நல்லா இருக்கு ராகவன்.

பா.ராஜாராம் said...

ஒரு அளப்பறியா கடல் என பார்க்க,சிலாகிக்க,கொண்டாட, கூடவே கூட்டிக் கொண்டு வர உங்களால்தான் முடியும் ராகவன்.உங்களுக்குள் இருக்கும் எங்களுக்காகவும்தானே வருகிறது கடலும் கடல் போன்ற எல்லாமும்.

பா.ராஜாராம் said...

கோட்டை பெத்தார் அப்பத்தாவையும் கூட்டிக் கொண்டு வந்து விட்டீர்கள் போலேயே..கடலை கொண்டு வந்தது போல்..

இருக்கட்டும்.அப்பத்தா சந்தோசமாய் இருப்பாள்!

:-)

S.A. நவாஸுதீன் said...

///கடலை எப்போதும் என்னுடன் எடுத்து
வர முடிவதில்லை///

கடலளவு இங்கே கற்பனை விரிகிறது ராகவன். அருமை போங்க.

உயிரோடை said...

இரண்டு மூன்று பிரிவின் படிமத்தை உள்ளடக்கி காலோடு ஓடிவரும் மணலாக கவிதை கூடவே வருகின்றது