Wednesday, March 17, 2010

கம்பிகளில் உறங்கும் மரணம்

அதிர்வுகளில்
ஒரு செய்தியை கடத்தி செல்கிறது
கம்பிகள்

கம்பிகளில் அமர்ந்திருந்த
கரிச்சான் குருவி ஒன்று
கொஞ்சம் தத்தி அமர்கிறது

குருவியின் தவ்வலையும்
செய்தியாய் மாற்றி கொண்டு
விரைகிறது அதிர்வுகளில்

செய்திகளின் கணம் தாங்காமல்
தொய்ந்து கடத்துகிறது
கம்பிகள்

கடத்தப்படும் செய்திகளில்
என்ன இருக்கும்
என்று கம்பிகளுக்கு கவலையில்லை

அதிர்வுகளின் அளவுகளில்
மட்டுமே கவனம் செலுத்தி
கடத்துகிறது
கம்பிகள், தேர்ந்த
செய்தி சொல்லிகளாய்
ஆவதில்லை எப்போதும்

தன் மீது அமர்ந்து பறக்கும்
கரிச்சான் குருவியின்
தவ்வலை அது முந்தி தரலாம்

உங்களுடைய
மரணச்செய்தியை அது
பின்னுக்கு தள்ளி
உங்களுக்கு அதை
சாவகாசமாய் சொல்லலாம்...

10 comments:

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு ராகவன்!

க.பாலாசி said...

ஸ்டேசன் பக்கத்தால நிறைய தந்திக்கம்பங்கள் இருக்கும்... ஒவ்வொருமுறையும் பாக்கும்போதும் எதுனாச்சும் அதுவழியா போவுமான்னு உத்துப்பாப்பேன். குருவிகள் மட்டும் சட்டுன்னு உட்காரும் சட்டுன்னு பறக்கும்.... ஒருவேள செய்திகளின் கணம்தான் காரணமோ என்னவோ.... ஆனாலும் கம்பிகளுக்கு எந்த கவலையுமில்ல....கவிதையில் சொன்னதுபோல....

Ashok D said...

கம்பிகள் தரும் அதிர்வுகள் நன்று ;)

மணிஜி said...

நல்லா வந்திருக்கு ராகவன்..(கனமா..கணமா..?)

ரிஷபன் said...

உங்களுடைய
மரணச்செய்தியை அது
பின்னுக்கு தள்ளி
உங்களுக்கு அதை
சாவகாசமாய் சொல்லலாம்

நெருடுகிறது...

காமராஜ் said...

ரொம்ப நல்லாருக்கு ராகவன்

Thenammai Lakshmanan said...

அருமை ராகவன்

ஈரோடு கதிர் said...

//கடத்தப்படும் செய்திகளில்
என்ன இருக்கும்
என்று கம்பிகளுக்கு கவலையில்லை //

சின்ன வயதில் கம்பத்தில் காது வைத்து என்ன பேசுவாங்க இதுல... ஏதாவது கேக்குமானு பார்த்தது நினைவுக்கு வருகிறது

அன்புடன் அருணா said...

/கடத்தப்படும் செய்திகளில்
என்ன இருக்கும்
என்று கம்பிகளுக்கு கவலையில்லை/
உண்மைதான்...கம்பிகளின் கதை நல்லா இருக்கு...
/கணம்/-----கனம்???

உயிரோடை said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு ராகவன்.

//அதிர்வுகளில்
ஒரு செய்தியை கடத்தி செல்கிறது
கம்பிகள் //

செய்தி அதிர்வானதா செயல் அதிர்வானதா நிறைய யோசிக்க வைக்கும் வரிகள். நல்லா இருக்கு