Thursday, March 18, 2010

அவள்...

மஞ்சள் வெயில்
முகத்தில் படிய
பொன் இழைகளை
தூக்கி முடியும்
அவளின் பிஞ்சு விரல்களில்
மைதா மாவின் பசை இன்னும்
மிச்சமிருக்கிறது

காய்ந்த தீப்பெட்டிகளின்
உள் பெட்டிகள்
சாக்கில் இருந்து கொட்ட எழும்
சத்தம்
கனன்று எரியும்
அடுப்பில் கொதிக்கும் உலையின்
தாளகதியை ஒத்திருக்கும்
அவளுக்கு

எண்ணிக்கையில் எப்போதும்
குறையும் பெட்டிகளின்
கணக்கு அவளுக்கு
புரிவதே இல்லை
வாரசம்பளத்தின் சில்லறையில்
அடங்காத பசி
வாய் பிளந்து காத்திருக்கும்

சோளக்களியும்
கருப்பட்டி தண்ணியும்
சோறும்
கருவாட்டு குழம்புமாய்
மாறி மணக்கும்
ஞாயிறு மட்டும்

கருவாட்டின் மனம்
கைவிட்டு அகலாது
பசை மாதிரி ஒட்டிக் கொண்டிருக்கும்
வாரம் முழுதும்

14 comments:

Ashok D said...

உண்மையாகவா.. அவ்வளவு கம்மியாவா கூலி கொடுக்கறாங்க...?

Ashok D said...

இந்த ’அவள்’ பிடிச்சுயிருக்கு

அன்புடன் அருணா said...

தீப்பெட்டி ஒட்டுபவரின் நிரந்தர வறுமையும் பசை விரல்களும் கண்முன் வந்து போனது ராகவன்..

பத்மா said...

பாவம் எப்போது விடியும்?

அம்பிகா said...

தீப்பெட்டி ஒட்டும் சிறுமியை கண்முன் நிறுத்தி விட்டீர்கள், மைதா மாவு பசை விரல்களோடு.
நிறைய சொல்கிறது கவிதை.

நேசமித்ரன் said...

பச்சை நிறத் தாமிர அழுக்கைபோல உள்படரும் நோய்மை ,பிஞ்சுவிரல் தொலைக்கும் பொம்மையுலகு குதூகலங்கள் ,பசித்த வயிற்றின் மடிப்புகளில் வளரும் திருட்டுக் காளான்கள்

மொழி : கண்ணாடி பார்க்காமலே ரிப்பனை உயர்த்தி ரெட்டைபின்னலுக்கு கட்டி கொள்ளுகையில் வண்ணத்துபூச்சியின் சிறகு போல முடிச்சிடும் விரல்களின் லாவகம் தெரிகிறது உங்களின் மொழியில்

வலியின் இடையே நன்னினைவுகளின்
உற்சாகம் தெளிக்கும் கவிதை மனதோடு பேசுவது ராகவன்

மதுரை சரவணன் said...

தீ குச்சியுடன் எரிவது பிஞ்சுவின் வாழுவும் அல்லவா..!
அருமை படைப்பு. வாழ்த்துக்கள்

பாலா said...

அருமை ராகவன்

காமராஜ் said...

ராகவன்
இன்னும்
ஒருகோடிக்கவிதைகள்
வந்தாலும் புதிது புதிதாய்
வரைந்து நீள்கிறது
வறுமையின் நிறம்.
மைதா மாவின் பசை,மணக்கிற கருவாட்டு இசையாகிறது ராகவன்.மிக மிக வலியோடு இழுக்கிறது கவிதை.

க.பாலாசி said...

//எண்ணிக்கையில் எப்போதும்
குறையும் பெட்டிகளின்
கணக்கு அவளுக்கு
புரிவதே இல்லை
வாரசம்பளத்தின் சில்லறையில்
அடங்காத பசி
வாய் பிளந்து காத்திருக்கும்//

மொத்தவலி இழுத்துக்கோர்த்தெடுக்கப்பட்ட கவிதை....

ரிஷபன் said...

ஒட்டிக் கொண்டிருக்கும் இந்தக் கவிதையும்..

hari said...

உங்கலது அவல் கவிதை மைதா பசைபொல் என் மனதில்

Thenammai Lakshmanan said...

உண்மைதான் பசை எப்போது விடும் அல்லது விடுபடும் ...?

ராகவன் said...

அன்பு அசோக்,
அன்பு அருணா,
அன்பு பத்மா,
அன்பு அம்பிகா,
அன்பு நேசமித்ரன்,
அன்பு சரவணன்,
அன்பு பாலா,
அன்பு காமராஜ்,
அன்பு பாலாஜி,
அன்பு பாரா,
அன்பு ரிஷபன்,
அன்பு ஹரி, (உன்ன இங்க பார்க்கிறதுல எனக்கு சந்தோஷமா இருக்கு)
அன்பு தேனம்மை,

உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் என் அன்பும், நன்றியும்

தனித்தனியாக எழுத ஆசை, நேரம் இல்லை என்று வழக்கம் போல சொல்லவும் தோனல. என்னத்த வெட்டி முறிக்கிறான்னு நிறைய பேருக்குத் கேட்கத் தோனுது இல்ல...

எழுதுறேன் எல்லோருக்கும் தனித்தனியா...

அன்புடன்
ராகவன்