Tuesday, March 23, 2010

கோயிற்பொழுது...

இரவெல்லாம்
பேசிக் களைக்கும்
பெருமுலை சிற்பங்கள்
வந்தவர்கள்
கை வைக்க கசிந்த பழங்கதைகள்

விரகத்தின் தவிப்பில்
விம்மி புடைக்கும்
பருத்த முலைக்காரிகளின்
பெருமூச்சில்
கருகி தொங்கும் வவ்வால்கள்

புணர்ந்து பெருகிய
நாகதெய்வங்களின்  
அடங்காத பசி அடங்க  
மண்டி செழித்த புதர்களில்
எலி பிடிக்க இறங்கி வரும்

துவாரபாலகர்கள்
பூதகணங்கள் ஏங்கும்
ஏவுவார் இன்றி
காவல் தொழில் மறக்கும்
களவுக்கு துணை போகும்

மூலவரும் உற்சவர்
ஆவார் சாக்குப்பொதியில்
தியானித்து,
பிரிந்த நாயகிகளின்
கனவில் புரண்டு 
நித்திரை இழப்பார்

ஏலம் விடும் மணிச்சத்தம்
பூஜை மணியென மயங்கி
அருள் பாலிப்பார்
சகலருக்கும்

10 comments:

Ashok D said...

கோயிற்பொழுது... மனதின் உள்தூவரங்களுக்கும் பொருந்துகிறது.

நேசமித்ரன் said...

ராகவன்

ஜென்மயில் தொகுப்பில் காதலியின் மார்பை வெறித்து பார்க்கும் சிற்பம் என்று ஒரு வரி உண்டு

நானும் கூட இடமுலை மேலமர்ந்து வலது விலாவில் எச்சமிட்டு என்று துவங்கி இருப்பேன் ஒரு கவிதையை

பா.ரா அண்ணனின் கவிதை ஒன்றின் பின்னூட்டத்திலும் உற்சவ தெய்வத்தின் மற்றோர் அவஸ்தையை பேசி இருப்பேன்

யாருமற்ற வகுப்பறைகள் கோவில்கள்
போர்த்தி நின்று கொண்டிருக்கும் தேர்
சதா ஈர்ப்புக்குரியவையாய் இருக்கின்றன

இந்தக் கவிதை மிக அற்புதமாக ஆகாசத்தில் துவங்கி
பின் மெல்ல மெல்ல இறங்கி சமவெளியை அடையும் நடை உடன் இருக்கிறது

பத்மா said...

ராகவன் திருவனந்தபுரம் பிரகாரத்தில் விளக்கு நாச்சியார் சிலைகளை பார்த்து இரவில் இவை என்ன செய்யும் என யோசித்திருக்கிறேன் .ஒரு பாழடைந்ததோ அல்லது பராமரிப்பு பத்தாமலோ உள்ள கோவிலில் இதெல்லாம் சாத்தியம் என கண் முன் விரிகிறது .கவிதை அழகா சிந்தனை அழகா .என்ன சொல்ல ராகவன்? மிகவும் பிடிச்சுருக்கு

காமராஜ் said...

கொனார்க் போயிருக்கிறேன்,இன்னும் சில சிற்பக்கோயில்கள் பார்த்தாலும் அந்த ஆண்டாள் கோயில் பெருந்தனச்சிற்பம்
எல்லா இடத்துக்கும் வந்து என்னை விட இது ஒசத்தியா எனக்கேட்கிற மாதிரி இருக்கும்.ஒரு வேளை அது காலத்தின் கேள்வியாகவும் இருக்கலாம்.இது இந்தக்கவிதை, மதுரை அல்லது ஸ்ரீவி கோயிலின் தாக்கமில்லாதிருக்க வாய்ப்பில்லை.ஆனால் எங்கோ கனவுக்குள் கூட்டிக்கொண்டு போகிற மாதிரியே இருக்கு ராகவன்.

பாலா said...

இதழ் பிரியவைக்கும் கடை எள்ளல் அருமை ராகவன்
செம ப்ளோ

க.பாலாசி said...

எங்கெங்கோ நினைவினை இழுத்துச்செல்கிறது இக்கவிதை.... ஆழ்ந்து பார்க்கையில் இதுவும் ஒரு கலைவடிவம்....

விநாயக முருகன் said...

எனக்கு இந்த கவிதை படிக்கும்போது காஞ்சிபுரம் தேவநாதன் குருக்கள் நினைவுக்கு வருகிறார் :)

Thenammai Lakshmanan said...

அருமை

காமராஜ் said...

விநாயக முருகன் என்ன இப்படி ? டைமிங் நகைச்சுவை.
சிரித்து முடியலைப்பா.பின்னூட்டங்களால் சிரிக்கவைக்கிற
ஒரு பகுதியும் இந்த வலைக்குள் இருப்பது எவ்வளவு சிலாக்கியம்.

அகநாழிகை said...

அருமையான கவிதை ராகவன்.