அந்த ஒற்றை வயலின்
உடுத்தி களைத்த
மெல்லிய பருத்தி புடவையில்
சுற்றப்பட்டிருந்தது
ஒரு குழந்தையை போல
அனைத்தலின் வெம்மையும்
முத்தத்தின் ஈரமும்
வாசிக்காமல் உறங்கி கொண்டிருந்தது
அந்த வயலினில்
புராதனம் கெட்டித்து
போன போவில் மயிர்கள்
ஒட்டிப்போய் இழைகளின்
தன்னிச்சையை அறுத்தன
அந்தோனியாவின்
நூற்றாண்டு தொன்மையில்
பாக்கின் இசை பூசிய
வர்ணபூச்சு இன்னும் கலையாமல்
உறைந்த மீன்தொட்டியாய்
உடைந்த நாடிப்பலகை மாத்திரமே
அதன் சிதிலம்
என்று சொன்னவனிடம்
கல்யாணத்திற்கு பிறகு இவர்
வாசிக்க விடுவதில்லை
என்ற என் மாமியாரின் நடுங்கும்
விரல்களின் முனைகள் கருகி இருந்தன
14 comments:
ராகவன் வார்த்தைகளால் மனதை அறுக்கிறீர்கள் .
முனைகள் கருகிக விரல்கள்
ஐயோடா இன்றைய சிந்தனை வேறெங்கும் செல்ல மறுக்கும்
ஒரே பாய்ச்சலா இருக்கப்பூ.
பெண்ணும்,இசைக்கருவியுமான
கலவை, பத்மா சொன்னது போல
அறுக்கத்தான் செய்கிறது.
//உடைந்த நாடிப்பலகை மாத்திரமே
அதன் சிதிலம்
என்று சொன்னவனிடம்
கல்யாணத்திற்கு பிறகு இவர்
வாசிக்க விடுவதில்லை
என்ற என் மாமியாரின் நடுங்கும்
விரல்களின் முனைகள் கருகி இருந்தன//
தாங்க முடியாது போய்விடுகிறது ராகவன்...
இன்று வாசித்த மிகச் சிறந்த கவிதை!
உங்களின் எழுத்தை படித்து முடிக்கும் போது மனது கணத்துப்போகிறது ஒவ்வொரு முறையும். அருமை.
கவிதையில் அந்த சோக உணர்வு அருமை
//சொன்னவனிடம்
சொன்னவளிடம்?
பெண்பாலில்தானே வரவேண்டும்?
அன்பு பத்மா,
சந்தோஷமாய் இருக்கிறது... உங்கள் பின்னூட்டங்களை படிக்கும் போது...
ஒவ்வொரு முறையும் ஒழுகும் உற்சாகத்தேன் நனைக்கிறது மனசு முழுக்க. என்னுடைய கோயிற்பொழுது, அப்பா என்னும் கதைசொல்லிக்கு உங்களின் பின்னூட்டங்கள், கவிதையின், கதையின் தொடர்ச்சி போல இருந்தது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. எத்தனை விசாலமான அனுபவம், அவதானிப்பு, பகுப்பு என்று பரந்து விரிகிறது உங்களின் படிப்புலகமும், அக்கறை மனசும்.
ஆயிரம் நன்றிகள் உங்கள் நட்புக்கு பத்மா!
அன்புடன்
ராகவன்
அன்பு காமராஜ்,
தொடர்ந்து தரும் உங்களின் ஊக்கமும், நீங்கள் காட்டும் அக்கறையும் என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது. ஒரு பதிவை எழுதி முடிக்கும் போதே இதற்கு காமராஜின் பின்னூட்டம் என்னவாயிருக்கும், ஆசான் என்ன சொல்வார் என்று ஆவல் மேலிட காத்திருப்பேன் ஒவ்வொருமுறையும். என்னை எப்போதும் ஏமாற்றியதே இல்லை... கட்டிய சினேகமும், அன்பும், பிரியமும் பூத்த நந்தவனங்கள் காலார நடப்பதில் சுகமெனக்கு... உயிர் நிரப்பும் வாசனைகளில் மிதந்தபடி இருக்கும் இந்த முகமறியா நட்பும்.
நன்றிகளுடன்
ராகவன்
அன்பு பாரா,
”என்னடு சூச்சுதுனோ”ன்னு ஆவல் மேலிட காத்திருக்கிறேன் பாரா. எத்தனை சினேகமான மனிதர்களை கொடுத்திருக்கிறது இந்த உறவு எனக்கு. இத்தனை விரிந்தது இல்லை ஒருபோதும், ஆழ, அகல விரிந்து நிழல் பரப்புகிறது உங்களின் குடும்பம் அதன் கிளைகள். எத்தனை வாஞ்சை எல்லோர் குரலிலும், உங்க சின்னம்மா, உங்கள் சகோதரி என்று எல்லோரும் நிழற்குடை விரித்து கற்பகவிருட்சமாய் இருக்கிறார்கள். எத்தனை படிக்கிறார்கள், என்ன வாசிப்பு.
மஹாவிற்க்கு சொல்லனும் அத்தனை நன்றியும், ஊற்றுக்கண் நீங்களாய் இருந்தாலும்.
உங்கள் அன்புக்கு பதிலாய் அன்பும்
அன்புடன்
ராகவன்
அன்பு ராமசாமி கண்ணன்,
உங்கள் அன்புக்கு நன்றிகள் பல. வலியது உயிர்நிலை படித்து நீங்கள் எழுதிய பின்னூட்டம் என்னை கஷ்டப்டுத்தியது... எத்தனை மென்மையானவராய் இருக்க வேண்டும் நீங்கள்...
ஒரு கவிதை எழுதும் போது எனக்கு இந்த உணர்வு தெரிவதே இல்லை, ஆனால் அதற்கான பின்னூட்டங்கள் வரும்போது அதன் தாக்கம் எனக்கே புரிய ஆரம்பிக்கிறது. இந்த கவிதைக்கான உங்கள் பின்னூட்டமும், கவிதையின் தரத்தை அங்குலம் அங்குலமாக உயர்த்துகிறது.
அன்புடன்
ராகவன்
அன்பு விநாயகமுருகன்,
வருகைக்கு நன்றி... அது சொன்னவனிடம் என்று தான் இருக்க வேண்டும், சொன்னவளிடம் என்றும் இருக்கலாம்.
உங்களின் வருகையும், கருத்துக்களும் என்னை உற்சாக விசில் அடிக்க வைக்கிறது. தொடர்ந்து வரவும்.
அன்புடன்
ராகவன்
விரலில் வித்தைக்காட்டி கவிதைப் படைத்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்
வாசிக்க இயலா வயலினிலிருந்து எழும்பிய சோக கீதம்..
உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்து கொள்கிறேன் வந்து பெற்றுகொள்ளவும்
அருமை நண்பரே
Post a Comment