Friday, October 01, 2010

நிலாத்துண்டம்...

நீண்ட நாட்களுக்கு
பிறகு அழைப்பு வந்தது
அந்த தொலைகாட்சியில் இருந்து
பழைய நினைவுகளை பற்றி பேச...
மேக்கப் போட்டு விட 
லட்சுமியம்மா இல்லை
இப்பவும் சில பல வருஷங்களை
மறைத்து விடுவாள் எப்படியும்
ஆந்திராவில் ஒரு கிராமத்தில்
இறந்தவளை பார்க்க
முடியவில்லை
நானூறாவது வேண்டியதிருந்திருக்கும்
மகனிடம் கேட்டா கத்துவான்னு அப்படியே
விட்டுட்டேன்
ரெமி பவுடர் மட்டும் இருந்தது
கொஞ்சம் மையும் இட்டுகொண்டேன்
பொட்டு வைப்பதா வேண்டாமா என்று
யோசனையாய் இருந்தது
அதையும்  விட்டுவிட்டேன்
அரக்கு கலர் சேலையும் வெள்ளை ரவிக்கையும்
பொருத்தமில்லை தான்
உருப்படியா இருந்தது அதுதான்
ஸ்டுடியோவில இருந்து காரு வந்தது
உசரமான படியா இருந்ததால ஏறமுடியலை
சின்ன ஸ்டூல் வைச்சு தான் ஏறமுடிஞ்சது
காஷ்மீர் ஷூட்டிங் போனப்போ
குதிரை ஏறமுடியாம விழுந்தது ஞாபகம் வந்தது
படாரென்று குதிரையில் இருந்து குதித்து
தூக்கிய நடிகரின் கை இடுப்பை வளைத்து
மெத்தென மார்பில் பட்டதாக நினைவு
ஸ்டுடியோ சென்றவுடன்
ஒரு பொண்ணு வந்து மேக்கப்பை சீராக்கினாள்
ஒரு ஓரமாக உட்கார வைத்தார்கள்
அரங்கத்தை பார்த்த போது
அப்போதைய நடிகர்களின்
மடியில், கைகளில்,
மரத்தின் பின்னால்,
நிலாவை பார்த்தபடி என்று
சுற்றி நான் சிரிக்கும் படங்கள் இருந்தது
அரங்கில் அழைத்தார்கள் நான் ரசித்த
பாடல்களை பற்றிய நிகழ்ச்சியாம் அது
அவர்களே ஒரு பட்டியல் கொடுத்தார்கள்
அப்போதைய பெரிய கதாநாயகர்களின்
பாடல்கள், பெரிய இசைஅமைப்பாளர்கள்
கவிஞர்கள் எழுதிய பாடல்கள் என்று
அதைப்பற்றி பேசவேண்டிய
வசனங்களும் இருந்தது அதில்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்
அதில் இல்லை
இரண்டு மணி நேரம் ஆனது
எல்லாம் முடிய
ஆயிரம் ரூபா கொடுத்தார்கள்
லட்சுமி அம்மா மாதிரி இருந்த
அந்த மேக்கப் பொண்ணுக்கு
500 ரூபா கொடுத்துட்டு
வீட்டுக்கு கிளம்பிட்டேன்
அடுத்த புதன்கிழமை ஏழரை மணிக்கு
வரும் என்றார்கள்
சீரியல் பார்க்கும் மருமகளிடம்
எப்படி சொல்வது என்று தெரியாமல்
யோசித்து கொண்டே வீட்டுக்கு கிளம்பினேன்

9 comments:

பனித்துளி சங்கர் said...

அசத்தல் . உணர்வுகள் ரணமாக வழிந்தோடுகிறது பதிவில் அருமை . பகிர்வுக்கு நன்றி

யாத்ரா said...

இந்தக்கவிதை என்னை ரொம்ப நிம்மதியிழக்கச்செய்யுதுங்க, ஓகோன்னு வாழ்ந்துட்டுஇருக்கும் போதே செத்துடனுங்க, காலம் மனித வாழ்க்கைக்கு செய்கிற மிகச்சிறிய உபகாரம் என்னவா இருக்கமுடியும் னா சரியான நேரத்தில் மரணத்தையும் வழங்கிவிடவேண்டும்.

கமலேஷ் said...

மனசுலையே நிக்கிற அருமையான கவிதை.

க ரா said...

இந்த மாதிரி நல்லா வாழ்ந்து கெட்டவங்கள கொஞ்ச பேர பாத்துருக்கேன் ராகவன்.. மனச அறுக்குது இந்த கவிதை

காமராஜ் said...

எத்தனை துண்டுகள் போட்டாலும் ரம்மியத்துக்கு குறைச்சல் இருக்காது நிலாவின் பாலொளியில்.உடைந்து கொட்டாரத்தில் கிடக்கும் கண்ணாடிச்சில்லுகள் மாதிரி டாலடிக்கிறது இந்தக்கவிதை.எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் முகம் காட்டுகிறது நிலாத் துண்டம்.எவ்வளவு பழசாகிறதோ அவ்வளவு போதை தருகிறது நினைவுகள். அதை ருசிக்க ருசிக்க எழுதிக் கொடுத்த கையை எடுத்துக்கைக்குள் வைத்துக்கொள்ளலாம்.

பத்மா said...

சரஸ்வதி அம்மாவை பத்தி நா நேர்ல பார்த்ததும் இதான். ஒரு மனசை வருத்தர கவிதையா வந்திருக்கு ராகவன். அருமை
மீண்டும் கவிதைகள் ஆரம்பித்திருப்பது ,எங்களுக்கெல்லாம் விருந்து . விடாது அளியுங்கள்

Ashok D said...

தவிப்பு :(

Ashok D said...

நல்ல சிறுகதையும் கூட

உயிரோடை said...

ராகவன் இதை சிறுகதையாக்கி இருக்கலாம் மிக சிறந்த கதையாகி இருக்க கூடும்