Thursday, November 04, 2010

கொலுசும் அவளும்...

சினுங்கும் பாதம்

 கழன்ற கொலுசு அறியவில்லை

இவள் பாதம் படும் இடங்களில்
தண்ணீர் நிரப்பியிருக்கும்
கிண்ணங்களென தெறித்த இசை
திரண்டு 72 மேளகர்த்தா ராகங்களையும்
நிரவியது

வழியெங்கும் விழுந்து கிடந்த
ஸ்வரங்களின் முனைகள்
மேலும் நகாசித்து
மின்ன ஆரம்பித்தன

படுக்கையறையில் இருந்து
கிளம்பிய இசை தவழ்ந்து
ஊர்ந்து பட்டாசால் வரை
நீண்டது

அவள் குளித்த போது
குளியலறையில் இருந்து
பெருக்கெடுத்து ஒடியது இசை
மனசெங்கும் வெள்ளக்காடு...
****

தவறிய ஒற்றைமணி
வாசிக்காத இசை
கொலுசில் மிச்சமிருக்கும்
****

புதுக்கொலுசு மாயகம்பளம்
பறந்து திரிவாள்
மனவெளியெங்கும்
****

பூக்களில் நெய்த மணிகள்
அணிந்தவள்
சிரிப்பில் இருந்து பொறுக்கிய
பரல்கள் கோர்த்து இசைத்தது கொலுசு
****

2 comments:

க ரா said...

ம்ம்ம்.. ரசனை மிகுந்த கவிதை ....

பத்மா said...

மெட்டி ஒலி கூட அழகு தான் இல்லையா ராகவன் ?
சிந்திய ஒரு மணி கரம் ஏந்தி, அதன் இசை உணரும் சுகம்