அன்று வெளிச்சம் குறைவாய் இருந்தது, காலையில் மணி எத்தனை என்று பார்த்த போது தான் உரைத்தது, எட்டரை மணி... தூங்கி எழுந்து காபி குடித்து விட்டு மறுபடியும் தூங்கியது ஞாபகம் வந்தது, யாரும் உசுப்பவும் இல்லை... பாஸ்கர் காலையிலேயே எங்கெயோ போயிட்டான் போல, காணவில்லை... நேற்று இரவு வந்தவுடன் நிறைய கதைகளை பேசிவிட்டு தூங்க ஆரம்பித்த போது மணி பன்னிரெண்டு தாண்டியிருக்கும்.
அப்பா, அம்மா, நாங்க ரெண்டு பேரும், ஹரியும் ஒரே ஹால் ல தான் படுப்பதே. அப்பா இப்போ இருந்தா, டேய் படுக்க வேண்டியது தானே, கண்ணு முழிச்சு ஒடம்ப கெடுத்துக்காதீங்கடா, எனக்கெல்லாம் பசினாலே தூக்கமே வராம கெடந்திருக்கேன், உங்களுக்கு என்னடா நிம்மதியா சாமிய கும்பிட்டு படுத்து தூங்க முடியாம கெடக்குறீங்க நான் பட்ட கஷ்டம்லாம் உங்களுக்கு கிடையாது, அதெல்லாம் யாம் பாடவும் கூடாது, அதை எல்லாம் சொல்லி முடியாது, ஆனா ஒன்னுடா அறியேன்னு மதுரைக்கு வந்தேன்... ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் இப்போ நல்லா இருக்கேன், கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டின்னு வந்து குடும்பத்தோட இந்த மீனாச்சி என்னயும் ஒரு வழிக்கு கொண்டு வந்து, வயித்துக்கு ஒரு குறையில்லன்னு வச்சிருக்கா... என்ன நினைப்பாரோ என்னவோ, எங்க பக்கம் திரும்பி , யார் உதவியும் இல்லாம நானே என் கைய ஊனி கர்ணம் பாஞ்சேன்! இது அப்பா அடிக்கடி தொடர்பில்லாமல் சொல்லிக்கிட்டே இருக்கும் வார்த்தைகள் ...பேசிக் கொண்டே இருக்கும்போதே உறங்கியும் விடுவார், குறட்டை சத்தம் வைத்து தான் தெரிந்து கொள்ளவேண்டும். இப்போ அப்பா இல்லாததால, அம்மாவுக்கு நாங்கள் பேசிக்கொண்டிருந்தது பெரிய பிரச்னையாய் இல்லை...ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிற பயலுக பேசிட்டு இருக்கட்டும் என்று பேசாம இருண்டு விடுவாள், ரொம்ப சின்னவயதில் நாங்க ரெண்டு சண்டை போட்டு கட்டி உருள்வதையும் இப்போ ஒட்டிக்கிட்டு இருக்கிறதையும் அப்பப்போ சொல்லி சிரிப்பாள்... ஹரி நேற்று பெரியப்பா வீட்டிலேயே படுத்துவிட்டான் போல இருக்கு ஆளக்காணோம்.
அப்பா, அம்மா, நாங்க ரெண்டு பேரும், ஹரியும் ஒரே ஹால் ல தான் படுப்பதே. அப்பா இப்போ இருந்தா, டேய் படுக்க வேண்டியது தானே, கண்ணு முழிச்சு ஒடம்ப கெடுத்துக்காதீங்கடா, எனக்கெல்லாம் பசினாலே தூக்கமே வராம கெடந்திருக்கேன், உங்களுக்கு என்னடா நிம்மதியா சாமிய கும்பிட்டு படுத்து தூங்க முடியாம கெடக்குறீங்க நான் பட்ட கஷ்டம்லாம் உங்களுக்கு கிடையாது, அதெல்லாம் யாம் பாடவும் கூடாது, அதை எல்லாம் சொல்லி முடியாது, ஆனா ஒன்னுடா அறியேன்னு மதுரைக்கு வந்தேன்... ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் இப்போ நல்லா இருக்கேன், கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டின்னு வந்து குடும்பத்தோட இந்த மீனாச்சி என்னயும் ஒரு வழிக்கு கொண்டு வந்து, வயித்துக்கு ஒரு குறையில்லன்னு வச்சிருக்கா... என்ன நினைப்பாரோ என்னவோ, எங்க பக்கம் திரும்பி , யார் உதவியும் இல்லாம நானே என் கைய ஊனி கர்ணம் பாஞ்சேன்! இது அப்பா அடிக்கடி தொடர்பில்லாமல் சொல்லிக்கிட்டே இருக்கும் வார்த்தைகள் ...பேசிக் கொண்டே இருக்கும்போதே உறங்கியும் விடுவார், குறட்டை சத்தம் வைத்து தான் தெரிந்து கொள்ளவேண்டும். இப்போ அப்பா இல்லாததால, அம்மாவுக்கு நாங்கள் பேசிக்கொண்டிருந்தது பெரிய பிரச்னையாய் இல்லை...ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிற பயலுக பேசிட்டு இருக்கட்டும் என்று பேசாம இருண்டு விடுவாள், ரொம்ப சின்னவயதில் நாங்க ரெண்டு சண்டை போட்டு கட்டி உருள்வதையும் இப்போ ஒட்டிக்கிட்டு இருக்கிறதையும் அப்பப்போ சொல்லி சிரிப்பாள்... ஹரி நேற்று பெரியப்பா வீட்டிலேயே படுத்துவிட்டான் போல இருக்கு ஆளக்காணோம்.
பாஸ்கர் எங்கள் வீட்டை விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போய் பதின்மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. எனக்கு அடுத்து பிறந்தவன், நான் படித்துக் கொண்டிருக்கும்போது அவன் சம்பாதிக்க தொடங்கி விட்டான். இது எப்படி ஆரம்பித்தது, அவனுக்கு படிப்பை நிறுத்திவிட வேண்டும் என்று ஏன் தோன்றியது என்று இன்றுவரை புரியவில்லை. குட்டியின் திருமணம் வரை மதுரையில் படித்துக் கொண்டிருந்தவன், ஒரு வாரமாக பள்ளிக்கூடம் போகாமல் இருந்து விட்டு, அதன் பிறகு படிக்கப்போகலை, நான் பட்டறைக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டான். என் அப்பாவின் அக்கா மகன்கள் சேது ரவி இருவரும், தங்கவேலை செய்யும் பட்டறை வைத்திருந்தார்கள், என் அப்பா வழி தாத்தாவும், என் அம்மா வழி தாத்தாவும் இதே தொழில் தான் செய்து வந்தார்கள். என் அத்தை மகன்கள் வரும்போதும் போகும்போதும் தடபுடலாய் செலவு செய்வது, ஹோட்டலிலேயே சாப்பிடுவது, கைசெயின், மோதிரம் என்று வலம் வருவது பாஸ்கரை அசைத்திருக்கலாம், திடீரென்று ஒரு நாள் என் அத்தை மகன் சேது வந்திருக்கும்போது நான் படிக்கலை, பட்டறைக்கு போறேன், எனக்கு படிப்பு வரலை என்று எதேதோ சொல்லிவிட்டான்.
அப்பாவுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை, அப்போது அவன் அரைப்பரீச்சையில் வாங்கிய பத்து மார்க் அவரை இந்த முடிவு எடுக்க உதவியிருக்கலாம். ஆனால் நான் ரெண்டு மார்க் வாங்கியிருக்கேன், அப்போது அதைப்பற்றி அவர் யோசிக்கவில்லை. ஏதோ கிரகம் நானும் சரின்னு சொல்லிட்டேன், இப்போ நினச்சா கஷ்டமாத்தான் இருக்கு... அப்போ வரும்படி வேற கம்மி, ஒரு ஆளு குறையறது, கொஞ்சம் பணமும் வரும்னு புத்தி பேதலிச்சு போச்சு என்று அடிக்கடி கண்ணீர் விட்டு புலம்புவார் அப்பா, கேட்கும் போது சங்கடமா இருக்கும். இப்போ மூன்று வருடங்கள் ஆகி விட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரையில் இருந்து எழுபத்தி மூன்றாம் கிலோமீட்டரில் இருக்கு, ஜெயவிலாஸ்ல ஏறுனா ஒன்னே கால் மணி நேரத்துல போய் விட்டுடுவான், இதுக்குபோய் என்னங்காணும் புலம்புறீர்னு என்று என் அப்பாவை தேற்றுவார், என் அத்தையின் கணவர், வக்கீல் குமாஸ்தாவா இருந்தவர், வக்கீல் மாதிரி சட்டம் பேசுவார் எல்லா நேரத்திலும், சமூக நாட்டாமை அவர் அப்போ. நீங்க முத மூனு பிள்ளைகள படிக்க வச்சு ஒரு வழியா அரசாங்க உத்தியோகம் பார்க்குறாய்ங்க, கடைசி ரெண்டு பிள்ளக தானே தங்க வேலைக்கு போகுதுக... பெரியவன் படிச்சுட்டு இருக்கான், இன்னும் தலை எடுக்கல இவனை படிக்க வைக்காம வேலைக்கு அனுப்புறோமே என்ற அப்பாவின் வார்த்தையை முடிக்க விடமாட்டார் மாமா. எந்த புள்ள உதவியா இருந்தா என்ன வோய்... கவலப்படாதீரும்...அவன் நல்லா வருவான் பாரும் என்ற தேறுதல் அவரை தேற்றவே இல்லை, கடைசிவரை.
ஏதாவது முக்கியமான வேலைக்கு மதுரைக்கோ அல்லது கோவைக்கோ தான் வரவேண்டும், மெஷின் கட்டிங் அல்லது பட்டற சாமான் வாங்குறது அல்லது கசை இழுக்கறதுன்னாலே இங்க வந்துடுவான் அவன் ஒரு நாள், ரெண்டு நாள் இருந்து வேலைய முடிச்சுட்டு தான் போவான். பாஸ் பய வந்தாலே, அம்மாவுக்கு தாங்காது... என் புள்ள அவக வீட்ல என்ன சாப்பிடுதோ, என்ன ருசிமசியா செய்றாகளோ இல்லையோ, என்று தலைக்கறி எடுக்கவும், குடல் கொழம்பு வைக்கவும் கிடந்து அலையும்... அப்பாவும் ஆமா, கழுதய என்ன சமைக்கிறா, என் அக்காவோட மருமகக்காரி உப்பில்ல சப்பில்ல... ஒரு நாள் போயி சாப்டுட்டு அப்படியே கண்ணு கலங்கி போச்சு புள்ள எனக்கு, அய்யோ இவன இப்படி கொண்டு வந்து விட்டுட்டமேன்னு... இரு நான் சிலிப்புக்கொடலு வாங்கியாரேன், அப்படி மஞ்ச, சீரகம் போட்டு பிரட்டுனாப்புல கொடு என்பார் அப்பா... அப்படியே எலும்பும் வாங்கிட்டு வாங்க... சூப்பு வச்சும் கொடுத்துடலாம்... என்பாள் அவள் பங்குக்கு.
அப்பா ஸ்ரீவில்லிபுத்தூர்ல பொறந்து, பெருமாளுக்கு, ஆண்டாளுக்கு சேவுகம் செஞ்சு பெரிய பழுத்த வைணவர் மாதிரி ஆச்சாரமா இருப்பார்... அதனால எங்க வீட்ல எப்பவுமே சனிக்கிழமை ஆட்டுக்கறியோ, கோழியோ எடுப்பதில்லை... அதிலும் முதப்புள்ள நான் சனிக்கிழமை பிறந்ததாலே, இந்த பழக்கம் ரொம்ப நாளா இருந்துச்சு... ஆனா இப்போ புள்ளக மேல இருக்கிற பிரியத்தால, அது கிடக்கு, இவ வாரதே ஒரு நாளோ ரெண்டு நாளோ... இதெல்லாம் பாக்கமுடியுமா... புள்ளகளுக்கு மேலயா சாமி என்பார்... பெருமாளே!ன்னு கண்ணத்திலயும் போட்டுக்குவார். அப்பாவிற்கு பெரிதாய் எந்த கொள்கையும் கிடையாது... மனுஷனுக்கு மிஞ்சி எதுவுமே கிடையாது... ஒரு பொருள் தொலைஞ்சு போச்சா, உடைஞ்சு போச்சா, கொடுத்த காச யாரும் திருப்பித் தரலையா... அவருக்கு கஷ்டமே இல்லை... அம்மா தொந்தரவு செஞ்சாலும் அவரு, எப்படி கேக்கிறது இதப்போய்... அவனுக்கு முடியறபோது கொடுக்குறான் இல்லாட்டி போகுது போ... பழக்கத்துக்குத் தானே கொடுத்தோம் என்பார். அவரு ஏதோ தப்பு செஞ்சுட்ட மாதிரியே மருகுவாரு எப்போதும், அதனாலேயே கூடுதல் கவனிப்பும், பிரியமும் அவம்மேல... பாஸ்கர சேதுபதி என்றும் துரை என்றும் கூப்பிடுவார் எப்போதும்...
இப்போ பாஸ்கர் வந்திருக்கான், ஜெயவிலாஸ் பஸ் பிடித்து வருவதில்லை, கார் எடுத்துக்கொண்டு வருகிறான்... கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் நல்லா வசதியா இருக்கான்... வீட்டுக்கு வரும்போதெல்லாம் வரும் அப்பாவின் நினைவு... எல்லா பேச்சிலும் அப்பா இருப்பார்... அவரின் சில கோமாளித்தனங்களையும் சொல்லி சொல்லி சிரிப்போம்... அப்பாவுக்கு ஒரு பழக்கம்... பேசும்போது அவருடைய உடல்மொழி பிரமாதமா இருக்கும்... உறவுகளில அவருக்கு... சிவாஜி தோத்தாருடா உங்கப்பாகிட்ட என்று சொல்பவர் இன்னும் இருக்கிறார்கள். கைய ஆட்டிக்கிட்டு, கண்ண உருட்டிக்கிட்டு பேசும்போது, அவ்வளவு சொல்வார், உடலிலும், பேச்சிலும் இதெல்லாம் மனசில் இருந்து வரும்... குரலை உயர்த்தி எங்கிருந்தாலும் கைய ஆட்டி, கண்ண சிமிட்டி நடிப்பு பாவணை பண்ணுவார் அவர். எழுந்தவுடன் பல் தேய்த்து குளித்து பெருமாள் கோவிலுக்கு போயிட்டு வரலாம் என்று நினைத்த போது, பாஸ்கர் திரும்பி வந்தான், கையில் துளசியுடன், குங்குமம், மஞ்சளுடன், நீ தூங்கிகிட்டிருந்தயா, அதான் கோயிலுக்கு போயிட்டு அப்படியே குணவிலாஸ் வெங்காய பஜ்ஜியும் வாங்கிட்டு வந்தேன், உனக்கு பிடிக்கும்னு... என்றவன் என் தம்பியாய் இல்லாமல் அப்பாவாய் தெரிந்தான். என்ன பார்க்கிற என்று சொல்லிவிட்டு பல்ல விளக்கிட்டு சாப்பிடு என்றான்... விரித்த பொட்டலத்தில், வாழை இலை சுற்றிய பஜ்ஜியின் வாசம் மனசெங்கும் பரவியது.
6 comments:
நெகிழ்ச்சியான நினைவலைகள்!
கூடவே பயணித்து அப்பாவை உங்களோடு பார்த்த திருப்தி. இந்த தலைப்புக்கு தனியாக spl பாராட்டுக்கள்
அருமையாஅழகா.... நம்ம பக்கத்து பேச்சு நடையில கதையா இல்லாம காவியமா சொல்லியிருக்கீங்க. ரொம்ப அருமை.
மனுஷனுக்கு மிஞ்சி எதுவுமே கிடையாது...
உண்மை தான் ராகவன் ..இப்படி இருக்கிற மக்கள் எத்தனை கம்மி ?
ஒருசமயம் தகப்பன் சாமி என்று சொல்வார்களே ,அது போல இளையவர்கள் நமக்கு மேல் போய்விடுவார்கள்.அதும் நமக்கு பிடித்தமானதாகவே இருக்கிறது இல்லையா ராகவன் ?..
நினைவோடையில் நீந்த வருகிறோம்.. செல்லுங்கள் ....
ராகவன்.... எதாவதொரு கணத்தில்,ஒட்டுமொத்த
சலிப்பையும் துடைத்துவிட்டு மகிழ்சியைக்கொண்டுவரும் நிகழ்வுகள் நடந்துவிடுவதுண்டு.எதாவதொரு கணத்தில் நெகிழ்சியன நினைவுகளை திறந்துவிட்டுப்போய்விடுவார்கள்.பஜ்ஜியும்,அப்பாவும் சேர்ந்து மணக்கிறார்கள்.
"அப்பா என்பது குணம்..."
அது மட்டுமா! அவர்கள் கற்றுத் தந்த வாழ்கையின் நடை பயணம் கூட.
குடும்ப உறவுகளின் கதை எப்போதுமே அசை போடக் கூடிய மகிழ்வான விஷயம். நன்றாக இருக்குங்க.
Post a Comment