Tuesday, November 09, 2010

ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் பஸ்ஸ்டாண்ட்....

அனல் பூக்கள் பிடுங்கப்பட்ட
இரவின் விளிம்பில் கிடந்தது அந்த வீதி
முழுதாய் எடுத்துவைத்தும்
எடுத்து வைக்காமலும் கிடக்கும் தேனீர் கடை
பெஞ்சுகளில், நாளை சம்பாஷிக்கப்படும்
வார்த்தைகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தது
பரோட்டாக்கடை வாசலின் முகப்பில் காத்திருந்த
பூனையை ஏய்த்து உறங்கிய எலிகளின்
கனவுகளில் முன்கையில் நீண்ட நகங்களுடன்
பிராண்டும் வறட்டொலி
முடிதிருத்தகம் கழித்த முடிகளின் உதிரியில்
எழுதப்பட்டிருக்கும் மரபணுவில்
மிஞ்சியிருக்கும் தொன்மையின் அடையாளங்கள்
நீர்த்து போய் கிடக்கும்
நிறுத்தத்தில் உறங்குபவரின் உறக்கத்தின் மீது
ஏறி இறங்கும் பேருந்தின் சத்தம்
ஜன்னலோர இருக்கைகளில் உறங்காமல்
விழித்திருப்பவரின் விழிகள்
கொண்டு வந்த கனவுகளின்
எண்ணெய் இடாத பற்சக்கரம்
பொடித்து நிற்கிறது
கழிவறையில் முயக்க முனகல்களின் வீச்சம்
கடன் சொல்லிப்போறவனை
ஜன்மம் வரை துரத்தும்
எல்லாம் உறுத்து நோக்கி கொண்டிருக்கும்
குற்றவிழிகளுடன் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் பஸ்ஸ்டாண்ட்

9 comments:

'பரிவை' சே.குமார் said...

Kavithai Arumai.

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவிதை அருமை..

பத்மா said...

நிறுத்தத்தில் உறங்குபவரின் உறக்கத்தின் மீது
ஏறி இறங்கும் பேருந்தின் சத்தம்

சீரிஸ்ல கொஞ்சம் நகைச்சுவை

ஒரு அமைதியான இரவு கண்முன் ராகவன் //
ஆனால் இதன் பின் உள்ள அர்த்தங்கள் எத்தனை எத்தனையோ

க ரா said...

ஒரு சிறுகதை படிக்கும் நினைப்புடன் வந்தேன்.. ஆனால் ஒரு பெருங்கதையின் முன்னுரை எழு்தப்பட்டிருக்கிறது இங்கே.. அருமை ராகவன் :)

மதுரை சரவணன் said...

//நிறுத்தத்தில் உறங்குபவரின் உறக்கத்தின் மீது
ஏறி இறங்கும் பேருந்தின் சத்தம்
ஜன்னலோர இருக்கைகளில் உறங்காமல்
விழித்திருப்பவரின் விழிகள்//


எதார்த்தம் வழிகிறது கவிதையில் .. வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

//நிறுத்தத்தில் உறங்குபவரின் உறக்கத்தின் மீது
ஏறி இறங்கும் பேருந்தின் சத்தம்
ஜன்னலோர இருக்கைகளில் உறங்காமல்
விழித்திருப்பவரின் விழிகள்//


எதார்த்தம் வழிகிறது கவிதையில் .. வாழ்த்துக்கள்

காமராஜ் said...

இது என்ன ராகவன்.
ஒரு பெரு நகர வீதியை இவ்வளவு அழுத்தமாக
சொல்லிக்கேட்டிருக்கிறேனா தெரியவில்லை.
எலி பூனைகள் உட்பட கடை நிலை ஜீவராசிகளையும் உள்ளிழுத்து எழுதும் மைநிறையக்கவிதையாய் கொட்டுகிறது. எல்லா வார்த்தைகளும் பாராட்டின் எல்லைக்கே போகிறது.உங்கள் பேரிலிருக்கும் அன்பால் கவிதை இன்னும் அழகாகத்தெரியலாம்.
எனினும் இது அற்புதமான கவிதை.

ராகவன் said...

அன்பு நண்பர்கள் எல்லோருக்கும்,

ஆச்சரியமாய் இருக்கிறது... சில பேர் வந்து நான் எழுதுவதை படித்துவிட்டு... நல்லாயிருக்கு,இல்லைனு சொல்றதுக்கு... சந்தோஷம் தான்... உங்கள் அணைவரின் அன்புக்கு நன்றிகள் பல... தொடர்ந்து வாசிச்சு... எதாவது எழுதுங்க!

அன்புடன்
ராகவன்

Unknown said...

அண்ணே மதுரை ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் பஸ்ஸ்டாண்ட உங்க கவிதைல அப்படியே வடிச்சிருக்கீங்கனே.நல்லா இருக்குனே