Wednesday, November 17, 2010

குறுமணல்...

முயங்காத இரவுகளின்
தனிமையில்
அம்மை கொப்பளங்களாய்
முளைத்த நட்சத்திரங்கள்

****

பரனில் இருந்து இறக்கிய
அப்பாவின் மரப்பெட்டியில்
பழைய புகைப்படம் ஒன்றில்
சிரிக்கும் அம்மா அல்லாத யாரோ

****

அடுக்களையில் ஒழுகும் நீர்
பிடிக்க வைத்த பாத்திரத்தில்
ஒரு பருக்கையை
இழுத்துக்கொண்டிருக்கும் எறும்புகள்

****

தடித்த உதடுகளில்
பொருந்தி எரிகிற சிகரெட்
குறுநகையில் செருகியிருக்கும் வன்மம்


****

கொலைபுரிந்தவனின்
உறக்கத்தில் செருகியது
இறைஞ்சும் விழிகள்


****

கைவிடப்பட்ட வீட்டின்
சிமெண்ட் தரையில்
பதிந்திருந்த காலடித்தடம்

****

ஆற்று மணலை அள்ளும்
உலோகக் கைகளில் சிக்கும்
நவமக்கள் தாழிகள்

****

11 comments:

sakthi said...
This comment has been removed by the author.
sakthi said...

எல்லா குறுங்கவிதையும் அழகு ராகவன்

sakthi said...

அடுக்களையில் ஒழுகும் நீர்
பிடிக்க வைத்த பாத்திரத்தில்
ஒரு பருக்கையை
இழுத்துக்கொண்டிருக்கும் எறும்புகள்

நல்லாயிருக்குங்க

sakthi said...

தடித்த உதடுகளில்
பொருந்தி எரிகிற சிகரெட்
குறுநகையில் செருகியிருக்கும் வன்மம்

சிரிப்பில் கூட வன்மம்மா????

காமராஜ் said...

ராகவன்.....

இந்த தலைப்பு அலாதி ஈர்ப்பு.

நெரு நெருவென பாதத்தில் கிச்சனங்காட்ட,
நம் தடம் மட்டுமே பின் தொடரும் ஏகாந்த
நடை எனக்கு நினைவுக்கு வருகிறது.
கொஞ்சம் மஞ்சள் வெயிலில் அதில் படுத்திருக்க கொடுத்திருக்கனும்.

க.பாலாசி said...

மனசில் படியும் மணல் தூறல்போல இந்த கவிதைகள்...அழகான வடிவமும் உயிர்ப்பும்...

அம்மைக்கொப்பளங்களும், அம்மா அல்லாத யாரோவும் கரம் பற்றுகிறது...

'பரிவை' சே.குமார் said...

// இருந்து இறக்கிய
அப்பாவின் மரப்பெட்டியில்
பழைய புகைப்படம் ஒன்றில்
சிரிக்கும் அம்மா அல்லாத யாரோ //
மனசைத் தொட்டது.
குறுமணல் தலைப்பு குறுகுறுக்கிறது.

Philosophy Prabhakaran said...

எல்லாமே அருமை... இரண்டாவது கவிதை அருமையிலும் அருமை...

முனைவர் இரா.குணசீலன் said...

அடுக்களையில் ஒழுகும் நீர்
பிடிக்க வைத்த பாத்திரத்தில்
ஒரு பருக்கையை
இழுத்துக்கொண்டிருக்கும் எறும்புகள்

வாழ்க்கையே போராட்டம்...

ராகவன் said...

எல்லா நண்பர்களுக்கும்,
என் அன்பும் நன்றியும்... குறுங்கவிதைகள் எழுதுவது சுலபமாய், பணி நேரத்தின் இடையே செய்யமுடிவதால்... எழுத வாய்க்கிறது... ஆனால் இன்னும் எனக்கு அது கைவரவில்லை... பார்க்கலாம்....
அன்புடன்
ராகவன்

உயிரோடை said...

குறுமணல் போலவே அழகான கவிதைத்துளிகள்