Friday, November 19, 2010

பூங்கதவின் மணிக்குமிழ்...

கதிர மரங்களை குடைந்து செதுக்கிய ஒற்றை ஸ்தனக்காரியின் பெருமூச்சுகள் அடர்ந்து பெருகும் துளையிடப்பட்ட மூங்கில் காடுகளை கடக்கும் ஒலி புகா இலைகள் வேய ஆரம்பித்து, கிழக்கின் மடியில் கிடந்த சந்தியின் குருதியில் தோய்ந்த ஜனனத்தின் ஓசையை என்திசையும் எதிரொலிக்க அடுக்கடுக்காய் தேய்ந்து வளர்ந்து என்திசை சமுத்திர வெளிகளில் ஆர்ப்பரிக்கும் அலைகளின் ஓலத்தில், ஆழாழியின் தாலாட்டில் பொதிந்து இருக்கும் பதினைந்தாம் இலக்கமிடப்பட்ட இரத்னப்பேழை திறந்தபோது தெறித்து ஓடிய பரல்களின் சிரிப்பில்,சினுங்கலில், ஒப்பாரியில் பழங்கள்ளாய் ஊறும் தோல் போர்த்த சப்தங்கள் மயக்கத்தின் உள்ளங்கைக்குள் இருக்கிறது இன்னும் பிரிந்து பிரிந்து ஊர்ந்து கொண்டிருக்கும் ரேகைகளாய் வளைந்து நெளிந்து மயிலிறகு ஜன்யங்கள் பல. மாயாமாளவகௌளை... அரிச்சுவடி...வித்யாப்யாஸம்... கண் திறந்து பார்த்த போது உச்சிமோந்து, முடிகோதி, விரல் பிரித்து நீவி, மனசு தடவி, அணைத்துக் கொண்ட உடம்பெங்கும் பால் ஊறும் எட்டுமுலைக்காரி...


சுடுநீர் பொசுக்கிய தடங்களை பீலிகள் அணிந்த விரல்களால் துடைக்கும், பெருமுலைக்காரியின் நாபியின் துளையில் தொடுத்திருக்கும் ஒற்றை நரம்பு தீண்ட தீண்ட வர்ணம் மாறி திறக்கும் சப்த மண்டலங்களின் கதவுகள், மணி பூண்ட குமிழ்கள் திருக திருக, முறுக்கேறிய பிருடைகளின் விடைப்பில் பற்றி எரியும் தீ நாக்குகள் சுழன்று சுழன்று எரிக்கும் கற்பூரமாய் நாறும் கமலக்கண்ணனின் வாயமுதம் தோற்கும் சுகந்தங்களின் பேருருவாய் எழுந்த நீர்விழ்ச்சியென நீரெழுச்சியென இரண்டு தோற்றம் தரும் இந்த பாடல்... மாயாமாளவகௌளையில் கொஞ்சம் பிருந்தாவன சாரங்காவின் தீற்றல்கள் தெரியும் காந்தார மயக்கம். மறுபடியும் ஒரு பழகிய வனவிலங்காய் வால் குழைத்து உருமாறும் சாதகபட்சியென, இளையராஜா விரல்கள் மேவிட... அடைத்த காற்று ஊதி கம்பிகளை அதிர வைத்து நிரப்பும் காற்றுப்பைகளில் இருந்து சிதறும் கொலுசு மணிகளின் சினுங்கலென குளிர் நீர்த்தாரைகளின் ஊற்றுக்கண்கள் விழித்து கிடக்கும் பொய்கையில் மிதக்கும் தெப்பம், நிழல்களில் வரும் இந்த பாடல், புதிதான குரல்... இசைவழி வந்தவன் பொறுக்கிக் கொண்டு வந்து தேர்ந்த சுவரமுத்துக்களை கோர்த்து பழகிய பயிற்சி.

தீபன் சக்ரவர்த்தி, உமாரமணன் இருவரின் குரலும் ஒரு மஹோன்னதமான ஒலிக்கலவை... செம்புல பெயல் நீர்... போல இரண்டும் இனைந்து, கலவியில் ஆடும் கூத்து  சர்ப்பங்கள் நிமிர்ந்து உயர்வது போல ரம்மியமாய், ஆச்சரியமாய் இருந்திருக்கிறது ஒவ்வொரு முறை கேட்கும்போதும்... பாடலில் ஆரம்பத்திலிருந்து உள்ளே நுழையும் போது அர்த்த மண்டபத்தின் இருட்டுக்குள் அழைத்து செல்லும், வழிநடத்தும் ஸ்வரங்களில் வேய்ந்த பந்தல் அது. பாரம்பரிய இசையின் அங்க லட்சனங்கள் அனைத்தையும் கொண்ட ஒரு சீரிய அப்பழுக்கற்ற ஒலி ஓவியங்கள்... ரவி வர்மாவின் ஓவியங்களில் இருக்கும் தைலங்களின் புராதனம் கலந்தது போல தூரிகைகளால் அல்லாது திமிறு, மத்தகம், தந்திகள், நரம்புகள் கொண்டு  வரையப்பட்ட அரூப ஓவியங்கள்... இசையும் இசைப்பவனும் வேறு வேறு என்று சொல்வது எப்படி சரியாக இருக்க முடியும்... இசையும், இசைப்பவனும், கேட்பவனும் கூட ஒன்றாகி விடும் ஒரு மூக்கூடல் இது... இண்டர்லூடாய் வரும் இசை வயலினில் ஆரம்பித்து, புல்லாங்குழல் வந்து, நாதசுவரத்தில் தொடரும் ஒற்றைச் சங்கிலியில் கோர்த்த மழை நீர், சுனை நீர், இளனீர், பதனீர் போல அடுக்கடுக்காய் சுவை சேர்க்கும் இந்த பாடல், இளையராஜாவின் மிகமுக்கிய பாடல்.

இந்த பாடலின் தனித்தன்மைகள் அனேகம், குரல்கள், ஒலிக்கலவை, வரிசைக்கிரமம், கட்டுமானம் என்று இது இளையராஜாவின் ஏனைய பாடல்களில் இருந்து தனித்து நிற்கிறது. இந்த காலகட்டத்தில் இளையராஜாவின் பாடல்களிலும், பின்னணி இசையிலும் மிக முக்கியமான இடத்துக்கு உயர்ந்தார். அபத்தமாக இருக்கும் பாடல்களின் காட்சி அமைப்பு இந்த பாடலை எந்த விதத்திலும் களங்கப்படுத்த முடியாமல் ஒரு ஜுவாலாமுகியாய் இருந்திருக்கிறது பெரும்பாலான நேரங்களில். இளையராஜாவை மிகவும் ரசிப்பவர்கள், வியப்பவர்கள், துதிபாடுபவர்கள் இந்தப் பாடலை குறிப்பிடாமல் இருப்பதில்லை தங்கள் சம்பாஷனைகளில்.

கதிர, ஒதிய, மூங்கில், ஆச்ச மரங்கள் அடர்ந்த தோப்பில் வெயில் வராது, எப்போதும் குளிர், அடர்ந்த மரங்களின் செழிப்பில் சொருகியிருக்கும் பெயரறியா பறவைகளின் கீச்சொலிகள் என ஒரு வனராஜனாய் எனக்குத் தெரியும் இளையராஜாவின் இந்த பாடல்.



அந்த பாடலின் லிங்க்:http://www.youtube.com/watch?v=mab2DPwCu9Y

23 comments:

'பரிவை' சே.குமார் said...

பூங்கதவே... பாடலை கவித்துவமாய் விளக்கியிருக்கிறீர்கள். பாடலுக்கான லிங்க் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ராகவன் said...

அன்பு சே.குமார்,
உங்கள் அன்புக்கு நன்றி... இதோ நீங்கள் சொன்னது போல இப்போது லிங்கை இனைத்து விட்டேன்...
நன்றிகள் உங்கள் கருத்துக்கும்.

அன்பு
ராகவன்

Sundar said...

லிங்க் கொடுக்கும் என் வேலையை குறைத்துவிட்டாயே நண்பா... சினிமாத்தனமான காட்சியையும் தாண்டி பாடல் பிடித்து போவதின் காரணம் ராஜாவை அன்றி வேறு யாராக இருக்க முடியும்...

பாடலை நோக்கும் பார்வைக்கு புதிய பரிமாணத்தை வழங்கிய நண்பா, மிக்க நன்றி....

பத்மா said...

ஆஹா ஆஹா கதவம் வழி இசை புகுந்து மனசெங்கும் வ்யாபிக்குது..
........ரீஸா.........

ராகவன் said...

சுந்தர்,

நீ வந்து பின்னூட்டம் போட்டது அதுவும் சுந்தராகவே வந்து போட்டது... சந்தோஷமா இருக்குடா... அனேகமா நீயும், நானும், ராஜேஷும் தான் இது போல பயித்தியக்காரத் தனங்களுடன் இருந்திருக்கிறோம் எப்போதும் என்பது சந்தோஷமாய் இருக்கு... எனக்கு முன்னயெல்லாம் எனக்கு பிடிச்சது வெளியே சொல்ல பயமா இருக்கும், ரஜினி பிடிக்குதுன்னு சொன்னாலோ அல்லது பாக்யராஜ் பிடிக்குதுன்னு சொன்னாலோ அல்லது பாலகுமாரன் தான் உசத்தின்னு சொன்னாலோ கூட இருக்கும் அறிவுஜீவி உலகத்தில் எனக்கொரு இடம் இல்லாம போயிடுமோ என்ற பயம், தயக்கம் இருந்தது... அது உங்கூட சேர்ந்த பிறகு தான் மாறுச்சுன்னு நினைக்கிறேன்... நீ எப்பவுமே தைர்யமா சொல்வ... எனக்கு பாலசந்தர் பிடிக்காது... கமல் ரொம்ப ஓவர் ஆக்ட் பண்றான்னு... அதுக்கப்பறம் தான் தெரிஞ்சது நம்ம வந்து அறிவு ஜீவி ஆகமுடியாது... அவ்வளவு தான்... உனக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியலை... நான் ஒரு ஜோல்னா பையி, முக்காக் காலுக்கு வேஷ்டி, நெற்றியில திருமண்ணுன்னு வேஷம் போட்டு திரிஞ்சிருக்கேன்... பேசும் போது ஐயங்கார் பாஷை தான் பேசுவேன் அது தான் ஒசத்தின்னு அப்போ ஒரு எண்ணம்... அது எல்லாத்தையும் உடச்சது நீதாண்டா சுந்தர்... தெண்டனிடுகிறேன்... நம்ம கல்லூரி காரிடாரில் நம்மை பேசாமல் கடந்த பெண்களே இல்லைனு எவ்வளவு பெருமை நமக்கு... நம்ம மூனு பேருல யாரு பெஸ்ட்ன்னு ஒரு ஒட்டெடுப்பே நடந்தது ஞாபகமிருக்கா... எல்லோரையும் அதிகமாக கிண்டல் செய்தவனும், அதிகமாக நேசித்தவனும் நீயா தான் இருப்ப... இன்னும் கூட நீயும், நானும் அனுப்பானடி போகும்போது பேசிக்கொண்ட விஷயங்கள் ஞாபகம் இருக்கு... மெஹர் எப்படி இருப்பா இப்போ? மனதை துளைக்கும் விஷயங்கள் இவை...

அன்புடன்
சீனு...

இளங்கோ said...

முதன் முதலாக உங்களின் தளத்துக்கு மாதவராஜ் அண்ணா குடுத்த சுட்டி மூலம் இன்றுதான் வந்து சேர்ந்தேன்.
இத்தனை நாள் எப்படித் தவற விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். :)

rajasundararajan said...

தொடக்கத்தில், எழுத்தாளர் கோணங்கியின் உலகுக்குள் நுழைந்துவிட்டோமோ என்று திகைக்க நேர்ந்தது. பிறகு, இது எழுத்தன்று இசை என்று மடுத்ததிர்ந்து எச்சரித்தது மூளைச் செவி. தமிழ்தமிழ்தமிழ்தமிழ்து.

போலந்தின் திரை இயக்குநர் ஸ்ஜானுஸ்ஸி, இசையைக் காட்சியாக்கித் தந்ததைக் கண்டிருக்கிறேன். எழுத்தில் தரமுடியும் என்று இன்றுதான் கண்டேன். வாழ்க ராகவன்!

கெட்டிமேளத் தாலிகட்டலும் தொட்டுத் தொடரும் ஆணுக்குப் பெண் பெண்ணுக்கு ஆண் ஈடுகட்டலுமாக எனக்குள் கலவி கண்டிருந்த இந்த இசையாப்பை இலக்கணம் அறிந்த உங்கள் வழியாக மறுகக் கிட்டியதில் செவியுணர்வின் விழி பனித்தேன்.

//அபத்தமாக இருக்கும் பாடல்களின் காட்சி அமைப்பு..//

மன்னியுங்கள், இசைக்குத் தான் செய்வது இன்னதென்று அறியாதவர் காட்சிப் படுத்தியவர். (உருவ மிகைக் காதலர் அவர், அருவச் சிறப்பிற்கு முறை செய்வார் என்று எதிர்பார்ப்பதும் முறையன்று.)

பிறகு, இசையை மொழிப் படுத்தியதைக் காட்டிலும் உங்கள் சுந்தரை வரவுகொண்டது, எனக்கென்னவோ, இன்னும் சிறப்பாக இசைக்கிறது.

Unknown said...

மிகவும் பிடிச்சப் பாட்டு. உங்க விளக்கம் வியப்பா இருக்கு.
இதில் உமா ரமணன் வாய்ஸ், ஒரு நதியோடை மாதிரி தான். 'நீரோடும் போலாடும் ஆசைக் கனவுகள் ....' வரி, ஆஹா! கேட்டுகிட்டே இருப்பேன். எனக்கு இவங்க அதிகம் சான்ஸ் கிடைக்காமலா, அல்லது பாடல்கள் நிறைய தராம இருந்தது வருத்தமே!

Sundar said...

மெஹர்!

நம் கல்லூரி வாழ்கையின் சாதனைகளில் ஒன்றல்லவா???

மிரண்ட கண்களும், பதுங்கும் உடல் மொழிகளுடனும், ஒரு மௌன, அழகுப் பதுமையாய் வளைய வந்தவளை எப்படி மாற்றினோம்? மொத்த PG building-ம் (பெண்கள்) உட்பட பொறாமைப்பட்ட காலம் இல்லையா? அல்லது, நாம் தான் அப்படியொரு நினைப்போடு திரிந்தோமா?

ராகவன் said...

அன்பு அண்ணன் ராஜசுந்தரராஜனுக்கு,

ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணே உங்க பின்னூட்டத்தை படித்தபோது... நீங்க என் தளத்துக்கு வருவது இரண்டாம் முறை... முதல் தடவை நான் எழுதிய சின்ன கவிதைகளை பற்றிய உங்களின் முதல் பின்னூட்டம் அப்போதே நெகிழ்வாய் இருந்தது... இந்த மனுஷன எப்படியாவது நம்ம தளத்துக்குள்ள வரவைக்கனும்... எழுத்தின் தரத்தினால இல்லாம போனாலும்... பாசத்தால மடக்கிப் போடனும்னு தோனியிருக்கு... பாராவுக்கு நான் எழுதுகிற பின்னூட்டத்திற்கு உங்களின் சிலாகிப்பு எனக்கு உச்சானி... கோழிக்குழம்பு பத்தி எழுதியது... உங்களிடம் இருந்த அதற்கு வந்த பதில் பின்னூட்டம் என்னை மேலும் நகர்த்தியது என்று தாராளமாய் சொல்லலாம்... யார் தளத்திலாவது உங்கள் பின்னூட்டத்தை பார்க்கும் போதெல்லாம்...ஓடி ஓடி படிப்பது உண்டு... நேசமித்ரனின் தளங்களில் நீங்கள் எழுதுவது எனக்கு சில சமயம் வியப்பாய் இருக்கும்... எதற்கு இவ்வளவு உடைச்சு உடைச்சு அலசனும்னு தோனும்... ஆனால் நானும் அது மாதிரி கள்ளத்தனமா புரிந்து கொள்ள, உடைத்து அலச முயற்சி செய்திருக்கேன்...

ரொம்ப முன்னாடி பெங்களூர்ல இருந்து நாகார்ஜூனன், தமிழவன் (?)னு நினைக்கிறேன்... வித்யாசம்னு ஒரு காலாண்டிதழ் நடத்தினாங்க... வழக்கம் போல ஒரு ஆர்வக்கோளாறில் வாங்கி படித்து விட்டு, அவர்கள் கட்டுடைத்து சூத்திரங்களுக்குள் அடைக்க முற்பட்ட சில வாய்பாட்டு கவிதைகளை பார்த்து நிஜமாகவே பயந்து பின்வாங்கி விட்டேன்... அதிலிருந்து அது போன்ற எழுத்துக்களை வாசிப்பது இல்லை... கொஞ்ச நாளாக கோணங்கியின் எழுத்தின் கடினத்தண்மையை வாசிக்க முற்பட்டு பல்லுடைந்த கதைகளை, இன்னும் தெளிவாய் பகிர இருள்வ மௌத்திகம், சலூன் நாற்காலியில் சுழன்ற படி, கல்குதிரை இதழ் என்று வாசிக்க ஆரம்பித்தேன்... ஆனாலும் எல்லோருக்கும் கோணங்கியிடம் இருந்து வந்ததில் பிடித்தது மதினிமார்களின் கதையும்,....கொத்தனின் ரசமட்டம், கோப்பம்மா என்பது எனக்கு தெளிவாகப்புரிந்தது. அது தான் நீங்கள் எனக்கு சொல்வதும் என்று கொள்கிறேன்... தவறாய் இருந்தால், சொல்லுங்க அண்ணே!
உங்களின் அன்புக்கும், ஆதுரத்திற்கும், வாஞ்சைக்கும் பதிலாய் என் அன்பும், நன்றிகளும்... எளிமையா எழுதுவது தான் கஷ்டம், அது தான் சிறப்பு என்பது உங்கள் முத்தாய்ப்பான செய்தி என்று கொள்கிறேன்... நான் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போது... இது போல திட்டு திட்டா கவிதைகள் எழுதிக்கிட்டு இருப்பேன்...கொஞ்சம் கஷ்டமான வார்த்தைகளப் போட்டு மேதாவித்தனத்தை காட்ட முற்பட்டிருக்கேன்... அப்போ தான் என்னோட ஆங்கில ஆசான்... நிரஞ்சன்னு ஒருத்தர்... எளிமையா எழுதறது தான் கஷ்டம்... ஓடி விளையாடு பாப்பா எழுதிப்பாரு பாப்போம்... என்றார். முயன்றபோது வலுக்கட்டாயமாய் சேர்த்த வார்த்தைகள் துருத்திக் கொண்டிருந்தது... சுந்தருக்கு எழுதியது ஒரு நெகிழ்ச்சியும் அன்பும் கலந்து எழுதியது... சுந்தருடன் நேரில் பேசியது போல இருந்தது... அந்த உணர்வை கொடுத்தது தான் அதனுடைய சிறப்பு என்பதை தெளிந்தேன்... இயல்பான எதுவுமே அழகு தான் இல்லையா அண்ணே!

மஹா கல்யாணத்தில் எடுக்கப்பட்ட உங்கள் புகைப்படங்களைப் பார்த்தேன்... நான் எதிர்பார்த்த மாதிரி இல்லை... மிடுக்காய் இருந்தீர்கள்... ரொம்ப சந்தோஷம்னே... சந்தோஷத்தில ஆரம்பிச்சு, சந்தோஷத்தில முடிக்கிறேன்... சந்தோஷமா தொடர்வேன் அண்ணே!

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு பத்மா,
என் மிரட்டலுக்கு பயந்தே பாவம் கஷ்டபட்டு படிக்கிறீங்க பத்மா... நிறுத்திக்கிறேன்... எல்லாத்தையும் நிறுத்திக்கிறேன்... இத்தோட நிறுத்திக்கிறேன்... எழுதுறத இல்லை.... போன் போட்டு படிக்க சொல்லி மிரட்டுறத...
அன்புக்கு பதிலாய் அன்பும்
ராகவன்

ராகவன் said...

அன்பு இளங்கோ,

மாதவராஜ்... என் பிரிய ஆசான்... நிறைய விஷயங்களில்... என்னை நாலு பேரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவரின் அன்பு மிகப்பெரியது... உங்கள் வருகைக்கும் அன்புக்கும் நன்றி இளங்கோ!

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு சேது,

உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் அன்பும் நன்றியும் சேது... தொடர்ந்து வந்து என் வாசிப்பை வலுப்படுத்துங்க!
அன்புடன்
ராகவன்

ராகவன் said...

டேய் சுந்தா,
ராஜசுந்தரராஜனின் பின்னூட்டத்தை பார்த்தியா... சிலிர்த்து போயிட்டேன்... உனக்கு எழுதிய பின்னூட்டம், பதிவை விட சிறப்பாக இருந்ததாக, உண்மையாக இருந்ததாக அண்ணனின் வார்த்தை... எவ்வளவு உண்மையில்ல... இது போல தான் பதிவும் இருக்கனுங்கிறது என்னோட எண்ணமும் கூட இருந்தாலும்... சிலசமயம் குரங்கு புத்தி விடாம... இதுபோல கிறுக்குத்தனம் செய்ய வைக்குது...

அன்புடன்
சீனு...

அம்பிகா said...

ராகவன்,
அருமையான பாடலை ரசனையோடு பகிர்ந்திருக்கிறீர்கள்.
பின்னூட்டங்கள் மேலும் சுவை சேர்க்கிறது பதிவுக்கு.
நான் தான் தாமதமாக வந்துவிட்டேன்.
படலைப் போல பதிவும் இனிமை. இந்த பாடலைக் கேட்டால், அன்று முழுக்க ஹம்மிங் வாயில் வந்துகொண்டே இருக்கும். உங்கள் பகிர்வும் நினைவில்....

காமராஜ் said...

அன்பின் ராகவன்.
எனக்கும் ராஜசுந்தரரஜண்ணா மாதிரித்தான்
இது ஏதோ மாஜிக்கல் விவகாரம் என்று நினைத்தேன்.கொண்டு வந்து முடிக்கிற போது பாட்டு இன்னும் ஆயிரம் அர்த்தங்களுடன் ஒலிக்க ஆரம்பித்து விட்டது ராகவன்.

கதிர,ஒச்ச... மரங்கள் எதுவாக இருக்கும்.மணிக்குமிழ்களைக்கண்டவுடன் கை நமநமக்கிறதே எதற்கு. பொங்கலுக்கு மேளமடிக்க வந்த கலைஞர்களோடு பழகி,அவர்கள் அயர்ந்த நேரத்தில் துணிவிலக்கி விரல்களால் மெல்ல தாளமிட்டபோது இசை எனக்கு என்னவாக இருந்தது.

இவர்கள் டண்டனக்கா பார்ட்டி என்று சொல்லிக்கொண்டிருந்த காலத்தில் தான் எஸ்பிபி யும் ராஜா சகோதரர்களும் காசைச்சுண்டி விட்டு சுரம் கண்டு பிடித்து விளையாண்டார்களாம்.

நாம் ஒரு கவிதை செய்ய,கடந்த கவிதையில் வராத சொல் தேடி எவ்வளவு மெனக்கெடவேண்டியிருக்கிறது. எத்தனை பாடல்கள். அதன் ராகம்,ஊடிசை,இவைகளை வித்தியாசப்படுத்தி ரசிக்க வைத்த காரியம் எவ்வளவு மலைப்பானது.

அதற்கெலாம் எழுத்தில் ஒரு அங்கீகாரம் உங்கள் பதிவு ராகவன்.
இனி இசையை ஒரு புது பார்வையோடு அனுகும் மனசு வாய்க்கும், உங்கள் பதியைப்படிக்கும் யாருக்கும்.

ராகவன் said...

அன்பு காமராஜ்,
பின்னூட்டங்கள் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது... எனக்குள்ளும் நேர்ந்தது எல்லோருக்குள்ளும் நேர்ந்திருக்கிறது...
இந்த வகைப்படுத்தமுடியா சந்தோஷம் வாய்க்கப்பெற்ற நாம் பாக்கியவான்கள் தானே காமராஜ்...

இசை அடர்த்தி ஒரு கானகம், ஒரு கானகத்தின் வழி நடத்தும் தேர்ந்த கைடைப்போல... இந்த பாடல்கள் நமக்கு, கானகத்தை பார்த்து வியந்து கொண்டிருக்கும்போதே காதில் வந்து விழும் பெயரறியா சப்தங்கள் எல்லாமே நாம் ரசிக்கும் சங்கீதங்கள்... இது போன்ற கானகத்தில் இருந்து தான் நமக்கு தேவையான மென்பொருளும்(software), வன்பொருளும் (hardware) கிடைக்கிறது... ஒச்ச மரங்களில் இருந்து செய்யப்படுகிறது வீணை, ஆச்ச மரங்களில் இருந்து நாதஸ்வரம், மூங்கில் புல்லாங்குழல், வயலின் என்று இசை வாத்தியங்கள் தந்த கானகம்... எத்தனை ஓசைகளைத் தரும் அது... பதினைந்தாவது மேளகர்த்தா ராகம் இது... இதில் இருந்து பிறக்கும் ஜன்ய ராகங்கள் நிறைய... இது சம்பூர்ண ராகம்... ஏழு சுவரங்களும் இருக்கும் ராகம் இது... இது முதல் யாமத்தில் பாட ஏதுவான ராகம்... இரண்டாம் சந்தியில்.??? ஒவ்வொரு வரியும் விளக்கம் கொடுத்தால், பொழிப்புரை ஆகிவிடும் என்ற பயத்தில் தொட்டும் தொடாமலும் கொடுக்கிறேன்...

சங்கீதம் கற்கும் எல்லோருக்கும் உருட்டி பெரட்ட வேண்டிய ராகம் இது... சரளி, ஜண்டை, தட்டு வரிசைகள் என்று ஆரம்பபாடம் எல்லாம் மாயாமாளவகௌளையில் தான்... இன்னும்... கொஞ்சம் பிசகானால்... பிருந்தாவன சாரங்காவின் சாயலைக் கொண்டிருக்கும்... சங்கீதம் பிசகினாலும் சங்கீதத்துக்குள்ள தான் விழுது பாத்தீங்களா காமராஜ்? இது போல எழுத சந்தோஷமாய் இருக்கிறது.... தொடர்கிறேன்... எல்லோருக்கும் பிடித்திருப்பது போல தோன்றுவதால்..

அன்புடன்
ராகவன்

ராகவன் said...
This comment has been removed by the author.
ராகவன் said...

கதிர மரம் என்பதற்கு பதில் ஒச்ச மரம் என்று சொல்லிவிட்டேன்... மன்னிக்கவும்... திருத்தி கதிர என்று படிக்கவும் என் பின்னூட்டத்தில்

அன்பன்
ராகவன்

பத்மா said...

ராகவன் படிக்கச் சொல்வதை ஏன் தொந்தரவு என சலித்துக் கொள்கிறீர்கள் ?என்னை போல சோம்பேறிகளுக்கு நினைவூட்டினாலும் நாலு நாள் கழித்து தான் படிக்கிறேன் .இந்த உலக மஹா சோம்பேறியை மன்னிக்கவும்.:))
அடுத்து கரும்பு தின்ன கசக்குமா ? என்ன?
கஞ்சா வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் நீங்கள் . மயங்கி மௌனமாய் வியக்கும் வாசிப்பு காரி நான் .
பல பாட்டுக்கள் இப்படி உங்கள் வார்த்தைகளில் நுழைந்து வாசமாகட்டும் .
வரவேற்க ரெடி ...:))
அடுத்து, எழுதி விட்டு சொல்லாமல் போனால் கொன்னுடுவேன் ஆமாம்:))

rajasundararajan said...

முதலில் மன்னிக்க வேண்டுகிறேன். கோழிக்குழம்பு ராகவன் நைஜீரியாவில் இருக்கிறார். அவரை முழுதும் வாசித்துவிட்டுத்தான் பின்னூட்டம் இடுவது என்று முடிவு செய்து இன்னும் வாசிக்கிற வேலையையே தொடங்காமல் இருக்கிறேன். அவரோடு ஒருமுறை தொலைபேசியபோதும் இதைச் சொல்லியிருக்கிறேன். இடையில் இரண்டு கவிதைகளுக்குப் பின்னூட்டம் இட்டேன். அவர் வேறொரு ராகவன். கோழிக்குழம்பின் சுவை அறியார் ஓர் அம்பி அவர். அவர்தான் 'பூங்கதவின் மணிக்குமிழ்' எழுதியவர்.

பா.ரா.வுக்குப் பின்னூட்டம் இடுவதற்கு முன் அவருடைய எல்லா எழுத்துகளையும் வாசித்தேன். நேசமித்ரனுக்கும் அப்படியே. பத்மா என்கிற பத்மஜாவை, மகள் மஹா கல்யாணத்தில் சந்தித்தேன். அழகாக இருப்பவர்கள் உருப்படியாக எழுதுவதற்கில்லை என்று நம்பி இருந்தேன் (நர்சிம், மன்னிக்க). முன்அனுமானங்களில் மண் விழ! யம்மா, என்னமாய் எழுதுகிறார்! அவரையும் முதலில் இருந்து முழுக்கப் படிக்கவேண்டிய project-ஆக ஒதுக்கி இருக்கிறேன். ராகவன் நைஜீரியாவும் ஒருவர் அப்படி.

ஆனால், அவரேதான் இவராம். நல்லா இருங்க. எனக்கு வேலை மிச்சம்.

கோணங்கியின் மதினிமார் கதை வகையறாக்களே எனக்கும் பிடிக்கும். ஆம், மொழிவல்லமை உள்ளாரால் மட்டுமே எளிமையாகவும் எழுதமுடியும். நேசமிதரன் கூட எளிமையான கவிதைகள் எழுதி இருக்கிறார்.

தம்பி காமராஜ் அவர்க்ளின் பின்னூட்டமும் அருமை!

'கோழிக்குழம்பு' ராகவன் அதே ரசனையோடு எழுதட்டும். கோணங்கியும் நேசமித்ரனும் கூட அந்த வீம்புபிடித்த தமிழிலேயே எழுதிவிட்டுப் போகட்டும். எல்லாமே ஊதியம்தாம், எங்களுக்கும் தமிழுக்கும்.

ராகவன் said...

ப்ரியங்கள் சிமிழ் திறந்த படி இருக்கும் சொற்களுக்குரிய ராகவன் ...

பிரபஞ்சத்தின் ஜன்னல்கள் சாத்திக் கொள்ளும் போது அகம் பேசத்துவங்குகிறது மனசின் ரகசிய அறைகளில் குட்டியிட்டிருக்கும் பூனைகளின் குழந்தைக் குரலில் இன்னும் சாம்பல் பூத்து அடிமடியில் கங்கு வைத்துள்ள உணர்வு முடிச்சுகள். சொல்ருசி அறிந்தவன் பென்சிலை சீவிய படி இருக்கிறான் கடந்து போகும் பறவைக்காகவோ அந்தியின் மந்த மாருதத்திற்கோ பூப்பெய்தும் அடிவயிற்று சுருக்’ வேண்டியிருக்கிறது அவனுக்கு .

இது உங்களுக்கான பர்ணசாலைக்காலம் ராகவன் .கவிதைகளைக் காட்டிலும் உரைநடையில் சொல் தன்னை எழுதிச் செல்கிற லாவகமும் சரளமும் வாய்த்திருப்பதாய் உணர்கிறேன் உங்கள் எழுத்துகளில் என் குற்றறிவில் .
கவிதை ஒரு தண்டட்டி தோள் தொடும் கிழவியாய் விழுதிறக்கி இருக்கும் ஆல மரத்தின் கிளையளவு அகன்ற மேகத்தை ஒரு தெர்மாமீட்டரலகு பாதரசமாக்குவது.உரைநடை .. குப்பி சோப்பு நீரில் ஆகாசம் மறைப்பது மூச்சடைத்த குமிழ்களால் . எழுதுங்கள் திருப்பதி ஆசாரியின் குடையோ பூங்கதவோ ..

வாழ்த்துகள் ராகவன் தொடர்ந்து எழுதுங்கள். 14 வருட மௌனத்தை கலைத்ததும் இந்த காகமற்ற தேசத்தின் தனிமைதான் எனக்கும்

நேயமுடன்

நேசமித்ரன்

Mahi_Granny said...

அறிவு ஜீவிகளுக்கெல்லாம் பின்னூட்டம் இடுவதில்லை என்று ஏற்கனேவே நேசமித்திரன் இடுகையில் பெருமையாய்( பொறமையாயும்) சொன்னதுதான் இப்போதும். அப்பாடா உங்கள் எழுத்தையெல்லாம் படிக்க நான் மீண்டும் முதல் வகுப்பில் சேர்ந்து தமிழ் கற்றால் தான் உண்டு.