Thursday, November 25, 2010

பிட் நோட்டீஸ்...

போர் இல்லை
குருதி கலந்த ஆறு
இங்கு ஓட இல்லை
ஷெல் என்பது யாருக்கும் தெரியாது
கற்பழிப்பு, வன்புணர்ச்சி
பெரிதாய் இல்லை
யாரும் பிய்த்து எறியவில்லை
பூமாலையை
புத்தகத்தில் அரிப்பவனுக்கு
காகிதத்தில் சொரிபவன்
எழுதும் தாள்களில்
பிணங்களின் நாற்றம்

*****
 
பூனையா அல்லது
காந்தாரியா
குறியீடு எது?

*****
 
உதிரும் நாளின்
கணக்கு வைத்திருக்கும்
உலர்ந்த மணித்துளி

*****
 
விரல்களின் நுனி
வடக்கு நோக்கும்
பயணம் பல திசைகளில்

*****
 
கொய்த கைகளில்
வைத்திருக்க முடியவில்லை
விரல்களற்ற காற்று...

*****
 
மூடிய திரைக்குள்
காட்சிபெட்டகங்கள்
திறந்து பார்க்க  ஒன்றுமில்லை

****

உதட்டில் வைத்து
எச்சரிக்க ஓராயிரம் விரல்கள்
கேட்பாரில்லை
மரங்கள்

*****

பரண்களில் வரங்களும்
கொலை ஆயுதங்களும்
எலிப்பொறிக்கம்பியில்
செருகப்பட்ட கடவுள்

*****
உரசிச்செல்லும் மேகங்களின்
வழி உறிஞ்சத்தெரியாமல்
வேர் விட்டு நீர் தேடும்
மரங்கள்

*****
 
துண்டு பீடியின்
நாறிய முனை பற்றத்
தயங்கி விரையும் விரல்கள்

*****

6 comments:

'பரிவை' சே.குமார் said...

எல்லா பூக்களுமே வாசமாய்...

//பூணை// - பூனையாக்கவும். *என் பதிவில் சொன்னது போல் நான் தமிழ் பண்டிட் வேலை செய்யவில்லை*

கடைசிக் கவிதை... அருமைகளில் அருமை.

இளங்கோ said...

//ஷெல் என்பது யாருக்கும் தெரியாது//
உண்மை.

Sriakila said...

ஒவ்வொரு வார்த்தையிலும் நிறைய விஷயம் இருக்கிறது என்று மட்டும் தெரிகிறது.

ஆனால் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை என்று நினைக்கிறேன்.

Sundar said...

சீனு,

நெத்தி அடி, முதலாவது...

இப்பிடி தானே ஆயிருது, பல நேரங்கள்ள? அடுத்தவன் வாழ்க்கை (மட்டும்) தானே பல பேருக்கு எழுதமுடிகிறது!

அப்பா அம்மா பாசம் எழுத எழுத -
இந்த தீவாளிக்காவது காசு அனுப்புடா,
அப்பா வேற பெரிய டாக்டர் கிட்ட காமிக்கணும்
அம்மாவோட கண்ணீர் அழிச்சிகிட்டே வருது...

தெய்வீக காதல் எழுதலாம் தான் -
மாப்ளே, முடிச்சிட்டியாமே?
நண்பனின் எக்காளம் தாண்டமுடியலே...

சரி, உயர்ந்த நடப்பு? -
ஏன்டா 15 ஈமெயில், 20 missed call, திரும்ப கூப்ட மாட்டியாடா?
எங்க எழுத?

பசி, பட்டினி?
நேத்து சாப்ட்ட கோழி பிரியாணியும் க்வார்டரும் கழுததுலேயே நிக்கிது...

அன்பான பொண்டாட்டி?
மோட்டுவளைய பாத்தோமா, எழுதுனோமான்னு இருங்க,
எனக்கு தெரியும் என்ன பண்றதுன்னு...

ராகவன் said...

அன்பு சுந்தா,

சரியான புரிதல்... நீயும் நானும் எப்போதும் ஒரு பக்கத்தில் (பேஜில்)... நிறைய பேர் இதை படிக்கவில்லை என்பது மறுபடியும் என் ஆதங்கம்... நான் சரியாச் சொன்னேனா என்ற சந்தேகம் இருந்தது... உன்னுடைய பின்னூட்டம், கொஞ்சம் திருப்தியாய்... உன்னை பழையபடி எழுத வைத்து விட்டேன்... அதே சரளமான நடை... நான் மெனக்கெடுவது மாதிரி நீ மெனக்கெடுவதாய் தெரியவில்லை... தொடர்ந்து எழுது... என் அன்பும்...

சீனு...

உயிரோடை said...

பிட் இருந்தாலும் அது குட்