பூக்கார கனிக்கு
அது என்னமோ
ராமகிருஷ்ணன் அண்ணனை
அதிகம் பிடிக்கும்
பேசும்போது கைய பிடிச்சுக்கிட்டு
பொது கிணற்றில்
நின்று கொண்டிருப்பவனை
பார்க்கையில் வித்யாசமாய் இருக்கும்
பூ விற்க வரும்போது
யக்கா! என்னும் அவன் குரலில் இருக்கும்
மெலிதான கொலுசொலி போன்ற சிரிப்பு
அவனை வேறுபடுத்திக்காட்டும்
சட்டையும் பூப்போட்ட லுங்கியும்
தான் அவனின் பிரத்யேக உடை
மேலே ஒரு துண்டு குறுக்கால
கட்டி இடுப்பில் செருகி இருப்பான்
கோடாலி கொண்டையும்
நடை தினுசும்
அவன் உடற்மொழிகள்
அகல்யா அக்காவிடம் ஒருமுறை
உன்ன மாதிரி மாரு வளர
என்னக்கா செய்யணும் என்று
கேட்டவனை விளக்க மாத்தால
அடித்த கதை எல்லோருக்கும் தெரியும்
இப்போது அவனிடம் யாரும்
பூ வாங்குவதில்லை
அதன் பின் அவனை
ரயில்வே ஸ்டேஷனில் பார்த்த போது
தாவணியும் ரவிக்கையும்
அணிந்து கீழே லுங்கியுமாய் இருந்தான்
நாகர்கோவில் மும்பை விரைவு வண்டியில்
ஏறியவனின் தீராக்கனவில்
ராமகிருஷ்ணனும் இருக்கலாம்
13 comments:
ஒரு கதை எழுதுவதற்கான களம் இதில் இருக்கிறது. கவிதையில் சுருக்கி விட்டீர்கள். எனிவே, நல்லாருக்கு மக்கா.
ராகவன்
பின்னிட்டீங்க உங்க மாஸ்டர் பீஸ்ன்னு சொல்லிக்கலாம்
அபாரம் ராகவன்!
ஆடுமாடு,நேசன் இருவருடனும் உடன்படுகிறேன்.
ஒரு மிக கனமான விஷயத்தை மிக எளிமையாகவும் அழுத்தமாகவும் பதிவு செஞ்சுட்டீங்கன்னே
இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியலே.. மனச என்னமோ செய்யுது..
வித்தியாசமான கரு. ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க.
ஆமாம் ...கவிதையில் சிறுகதைக்கான பிடிமானம் இருக்கிறது.நல்ல கவிதை.வாழ்த்துக்கள்
இதைப் போல பல கதைகளை கேட்டும், மனிதர்களைப் பார்த்து இருந்தாலும் வலிக்கவே செய்கிறது. அருமையான சொற்சித்திரம்.
ஒரு நுணுக்கமான உணர்வ எவ்ளோ அலட்சியமா சொல்லிட்டீங்க ராகவன்
ஆச்சர்யம் இன்னம் அகலவே இல்லை
என்ன கனவு இருந்திருக்கக்கூடும் என்ற நினைவு கொல்லாமல் விடாது ராகவன் .ஒரு விடை இல்லா கேள்வி இது .அவன் இருப்பும் அவன் மனவோட்டமும்
மனதை துளைக்கும் கவிதை
நல்ல உணர்வு
இன்னொரு வாடாமல்லி...
முடிவில்லா...ஒரு கதை படித்த உணர்வு.
அன்பு நண்பர்கள் அனைவருக்கும்,
என் அன்பும் பிரியம் கலந்த நன்றிகளும்...
ஆடுமாடு
நேசமித்ரன்
பாரா
ராஜசேகர்
விக்னேஷ்வரி
கார்த்திகா வாசுதேவன்
மாதவராஜ்
பாலா
பத்மா
சிவசங்கர்
கலகலப்ரியா
அன்புடன் அருணா
உங்கள் எல்லோருக்கும் என் மேலான நன்றிகள் மறுபடியும்...
பிரதிபலன் பாராத அன்பும், நட்பும் கிடைக்கப்பெற்ற நான் பாக்கியசாலி.
முதன் முறையாக என் வலைத்தளத்திற்குள் வந்த புதிய தோழமைகளுக்கு என் அன்பும்
அன்புடன்
ராகவன்
Post a Comment